எம்ஜிஆர் சிலை சேதம்: ஈபிஎஸ் கண்டனம், ஒருவர் கைது!

By கரு.முத்து

தஞ்சாவூர் வடக்கு வீதியில் இருந்த எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சிலையைச் சேதப்படுத்தியதாக ஒருவரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

மீண்டும் நிறுவப்பட்ட எம்ஜிஆர் சிலை

தஞ்சாவூர் வடக்கு வீதி பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இன்று (ஜன.25) காலை சிலை இருந்த பீடம் காலியாக இருந்தது. அதில் இருந்த எம்ஜிஆரின் சிலையைக் காணாமல் அப்பகுதி வழியே சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நேற்று நள்ளிரவில் மர்மநபர்கள் யாரோ சிலையை பெயர்த்துள்ளது தெரியவந்தது. சிலையைக் காணோம் என்ற தகவலறிந்ததும் கரந்தை பகுதி செயலாளர் அறிவுடை நம்பி, கோட்டை பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி, 8-வது வார்டு செயலாளர் சங்கர் மற்றும் ஏராளமான அதிமுகவினர் திரண்டதால் அப்பகுதியில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பெயர்க்கப்பட்ட சிலை பீடத்தின் பின்புறம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு அதை எடுத்து மீண்டும் அதே இடத்தில் அதிமுகவினர் வைத்தனர்.

கைது செய்யப்பட்ட சேகர் (என்கிற) அந்தோணி

இதுகுறித்து தகவலறிந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சை வடக்கு வீதியில் எம்ஜிஆர் சிலை சமூக விரோதிகள் சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எம்ஜிஆர் புகழுக்குக் களங்கம் விளைவிக்கவும், பொது அமைதியைச் சீர்குலைக்கவும் நினைப்போர் மீது அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய விஷமச் செயல்கள் இனியும் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிலை சேதப்படுத்தியது குறித்து அதிமுகவினர் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த தஞ்சை மேற்கு காவல் நிலைய போலீஸார் தீவிர விசாரணை நடத்தி
தஞ்சாவூர் வடக்கு வாசல் கல்லறை மேட்டு தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சேகர் என்ற அந்தோணியைக் கைது செய்துள்ளனர். இரவில் குடி போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இப்படிச் செய்துவிட்டதாக அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE