மாணவர்களுக்கான பிரத்யேகத் தேர்தல் அறிக்கை: களமிறங்கும் காங்கிரஸ்!

By காமதேனு

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், கல்விச் சூழலில் நிலவும் பிரச்சினைகள், வேலைவாய்ப்பின்மை போன்றவற்றை ஆயுதங்களாகப் பயன்படுத்தி பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கும் வியூகத்துடன் களமிறங்குகிறது காங்கிரஸ். அதன் ஒருபகுதியாக, மாணவர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை கோவா தலைநகர் பனாஜியில் இன்று வெளியிடுகிறார் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் (என்எஸ்யூஐ) தலைவர் நீரஜ் குந்தன். இச்சங்கத்தின் தலைமையகத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில், இந்த அறிக்கை வெளியிடப்படவிருக்கிறது.

இதில் கோவா மாநிலத்தின் மாணவர்களும், இளைஞர்களும் சந்திக்கும் ஒன்பது முக்கியப் பிரச்சினைகள் குறித்த அம்சங்கள் இடம்பெறுகின்றன. தேர்தலை எதிர்கொள்ளும் வேறு எந்த மாநிலத்துடனும் ஒப்பிட கோவாவில் வேலைவாய்ப்புகள் மிகவும் அருகிவிட்ட சூழல் நிலவுகிறது என இந்திய தேசிய மாணவர் சங்கம் விமர்சித்திருக்கிறது.

இது குறித்துப் பேசிய நீரஜ் குந்தன், “கோவா மட்டுமல்ல, கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களின் பிரச்சினைகளை பாஜக அலட்சியமாகக் கையாள்வதால், மாணவர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்வுகளைத் தள்ளிவைப்பது, ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான கொள்கைகள் என எல்லாவற்றிலும் நாங்கள் குரல் கொடுத்துப் போராட வேண்டியிருக்கிறது” என்று கூறினார்.

கோவாவில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல், கல்விக் கட்டமைப்பே நொறுங்கிவிட்டதாக விமர்சித்த அவர், “கோவாவின் முன்னேற்றத்தில் காங்கிரஸ் கட்சி உறுதிபூண்டிருக்கிறது எனும் செய்தியை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெளிவாகத் தெரிவிக்கும் வகையில் இந்தத் தேர்தல் அறிக்கை இருக்கும். மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒற்றுமையுடன் திரள வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் அவர் வேண்டுகோள் விடுப்பார் எனத் தெரிகிறது.

பிரியங்கா காந்தி

ஏற்கெனவே, உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் இத்போன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டதாகக் குறிப்பிட்ட நீரஜ் குந்தன், மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த முக்கியத்துவத்தை அவர்கள் இருவரும் தெளிவாகச் சுட்டிக்காட்டியதாகக் கூறினார்.

டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் வெளியிட்டனர். உத்தர பிரதேசத்தின் தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 1.5 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், உயர் நிலைப் பள்ளிகள், மேல் நிலைப் பள்ளிகள் ஆகியவற்றுடன் காவல் துறையிலும் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான ஐந்து முக்கிய அம்சங்கள் அதில் இடம்பெற்றிருப்பதாகப் பிரியங்கா காந்தி கூறியிருந்தார்.

அப்போது, உத்தர பிரதேசத் தேர்தலில் காங்கிரஸ் முகமாகத் தான் முன்னிறுத்தப்படுவதாக பிரியங்கா காந்தி சூசகமாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்தகட்டமாக உத்தராகண்ட் , பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் இதேபோன்ற அறிக்கையைக் காங்கிரஸ் வெளியிடவிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE