வத்தலண்டு அருகே கறிக்கடைக்காரர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 கிலோ சந்தன கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்ததோடு, அவரையும் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உள்ள ஜி.தும்மலப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 52). இவர் வத்தலகுண்டு அரசு மருத்துவமனை எதிரே இறைச்சிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டில் சந்தனக் கட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், சப்இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா ஆகியோர் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது செல்வராஜ், தன் வீட்டில் 40 கிலோ சந்தன கட்டைகளை பதக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் அவரையும் கைது செய்தனர். இந்தச் சந்தனக் கட்டைகளை செல்வராஜ் யாரிடம் இருந்து வாங்கினார், தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் இருந்து இவை வெட்டிக்கடத்தப்பட்டன என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.