கோவில்பட்டி கரோனா வார்டில் மருத்துவர் - காவலர்கள் இடையே தகராறு

By என்.சுவாமிநாதன்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கரோனா நோயாளிகளுக்கான சிறப்பு வார்டில் பணியில் இருந்த காவலர்களுக்கும், மருத்துவருக்கும் இடையே தகராறு நடந்தது. இதுதொடர்பாக இரு தரப்பினரும் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

கரோனா பரிசோதனை

கோவில்பட்டியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கரோனா சிகிச்சை வார்டில் கோவில்பட்டி கிளை சிறையில் இருக்கும் 3 கைதிகள் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த கைதிகள் தப்பி ஓடிவிடாமல் பாதுகாக்கும் வகையில் காவலர்கள் ஜெகன், ராஜேந்திரகுமார், கனகராஜ் ஆகியோர் பணியில் இருந்தனர்.

இந்நிலையில், கரோனா வார்டில் சிகிச்சையளிக்க வந்த மருத்துவர் சீனிவாசனுக்கும், போலீஸாருக்கும் இடையே தகராறு நடந்தது. இதுதொடர்பாக இருவரும் புகார் கொடுத்துள்ளனர்.

மருத்துவர் சீனிவாசன் கோவில்பட்டி காவல்நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், “நான் கோவிட் வார்டுக்குள் சென்றபோது காவலர்கள் மூவரும் கால்மேல் கால் போட்டு அமர்ந்துகொண்டு வாட்ஸ் -அப் பார்த்துக் கொண்டிருந்தனர். முழுக்கவச உடையில் சென்ற என்னை நான் போகும்போதும், வரும்போதும்கூட அவர்கள் யாரென்றே கேட்கவில்லை. இதுபற்றிக் கேட்டபோது அவர்கள் என்னை ஒருமையில் பேசியதோடு, நாங்கள் நினைத்தால் உன் மேல் வழக்குப் போடுவோம் என மிரட்டினர். நோயாளிகள் முன்பே இது நடந்தது. மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” எனப் புகார் கொடுத்தார்.

இதேபோல் காவலர்கள் தரப்பில் கனகராஜ் கொடுத்துள்ள புகாரில், “டாக்டர் உடை இல்லாமல் சிவில் உடையில் வந்தவர் திடீரென எங்கள் மூவரிடமும், ‘இருக்கையில் இருந்து எழுந்து மரியாதை தர முடியாதா?’ என அசிங்கமாகத் திட்டினார். ‘பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு போலீஸ் வேலைக்கு வந்த உங்களுக்கு எப்படி டாக்டருக்கு மரியாதை கொடுக்கத் தெரியும்?’ எனவும் திட்டினார். ஆனால் அவர் சிவில் உடையில் இருந்ததால் டாக்டர் எனத் தெரியாது என சொன்னோம். ஆனால் அவர் திட்டினார். இதனால் மன உளைச்சல் அடைந்துள்ளோம்” எனப் புகார் கொடுத்துள்ளனர்.

பாதுகாப்புப் பணிக்கு வந்த காவலர்கள், சிகிச்சை பெறும் கைதிகளுக்கு அருகில் சிவில் உடையில் சென்றவரிடம்கூட விளக்கம் கேட்காமல் வாட்ஸ் -அப் பார்த்துக்கொண்டே இருந்தது சர்ச்சையாகியிருக்கிறது.

இதுதொடர்பாகவும், இந்த மோதல் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE