உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதலாவது பட்டியலை, காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கிறது. 53 வேட்பாளர்களின் பெயர்கள் அதில் இடம்பெற்றிருக்கின்றன. எனினும், உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத்தின் பெயர், இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. இவ்விஷயத்தில் இன்னமும் காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கவில்லை எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தப் பட்டியலின்படி, மாநிலக் காங்கிரஸ் தலைவர் கணேஷ் கோதியால் ஸ்ரீநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் ப்ரீத்தம் சிங் சக்ரதா தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜகவிலிருந்து காங்கிரஸுக்கு வந்த யஷ்பால் ஆர்யாவுக்கு பாஜ்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவரது மகனுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. தந்தை - மகன் இருவரும் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குத் தாவி, பின்னர் மீண்டும் தாய்க்கட்சிக்குத் திரும்பியவர்கள்.
ஹரீஷ் ராவத்துக்கு இவர்கள் அனைவருடனும் பிணக்கு இருந்தது. தேர்தல் பணிகளில் தனக்கு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாகக் கருதிய அவர், “தேர்தல் கடலில் நாம் நீந்தியாக வேண்டும். ஆனால், அமைப்பு என்னை ஆதரிக்காமல், பாராமுகம் காட்டுகிறது அல்லது எதிர்மறையாகச் செயல்படுகிறது. நான் யாரைப் பின்தொடர வேண்டுமோ அவர்களின் ஆட்கள் என் கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறார்கள். ‘ரொம்பவே பார்த்தாயிற்று ஹரீஷ் ராவத். நிறைய செய்துவிட்டாய். இனி ஓய்வெடுக்க வேண்டிய தருணம்’ எனும் எண்ணம் எனக்குள் வந்துவிட்டது” என்று கடந்த மாதம் ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து, பஞ்சாப் காங்கிரஸிலிருந்து வெளிவந்து அமரீந்தர் சிங் புதிய கட்சியைத் தொடங்கியதுபோலத்தான் ஹரீஷ் ராவத்தும் புதிய கட்சியைத் தொடங்குவார் என பாஜகவினர் பேசத் தொடங்கினர். ஏற்கெனவே கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களும் அவருக்கு ஆதரவாகப் பேசிவந்தனர். எனினும், ஹரீஷ் ராவத், கணேஷ் கோதியால், ப்ரீத்தம் சிங் ஆகியோரை டெல்லிக்கு அழைத்து ராகுல் காந்தி பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், பிரச்சினை முடிவுக்கு வந்தது.
பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், காங்கிரஸில் உட்கட்சி ஜனநாயகம் இருப்பதால்தான் இதுபோன்ற எதிர்க்குரல்களுக்கும் மதிப்பளிக்கப்படுகிறது என்றும் ஹரீஷ் ராவத் கூறிவருகிறார்.
கசப்புணர்வு
காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குத் தாவி காங்கிரஸில் சேரும் தலைவர்களால் அதிருப்தியடைந்திருக்கும் ஹரீஷ் ராவத், அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதில்லை. அதேபோல, பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஹரக் சிங் ராவத் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, கட்சி என்ன நினைக்கிறதோ அதையே தானும் நினைப்பதாக ஹரீஷ் ராவத் கூறியிருந்தார். அதேவேளையில், ஹரக் சிங் ராவத்தின் பெயரும் முதலாவது பட்டியலில் இடம்பெறவில்லை. ஹரக் சிங் ராவத், தனது மருமகள் அனுக்ரிதிக்கும் சீட் கேட்டு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
2017 சட்டப்பேரவைத் தேர்தலில் ஹரித்வார் (கிராமப்புறம்), கிச்சா என இரு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் தோல்வியைச் சந்தித்தவர் ஹரீஷ் ராவத். இந்நிலையில், ராம்நகரில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுமாறு அவரிடம் காங்கிரஸ் தலைமை கேட்டுக்கொண்டதாகவும், அவர் அதுகுறித்துப் பரிசீலித்துவருவதாகவும் கூறப்படுகிறது. அடுத்த பட்டியலில் அவரது பெயர் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.
முதல்வர் வேட்பாளர் யார்?
இந்தத் தேர்தலில், முதல்வர் வேட்பாளராகத் தன்னை முன்னிறுத்த வேண்டும் என வெளிப்படையாகப் பேசாவிட்டாலும், அதைத்தான் ஹரீஷ் ராவத் விரும்புகிறார்.
நேற்று ரிபப்ளிக் செய்தி சேனலுக்குப் பேட்டியளித்த ஹரீஷ் ராவத்திடம், “முதல்வர் வேட்பாளராக உங்களைக் காங்கிரஸ் கட்சி முன்னிறுத்துமா?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் செல்லுமாறு கட்சித் தலைமை என்னைப் பணித்திருக்கிறது. நான் அந்தப் பணியில்தான் கவனம் செலுத்துகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.