தமிழகத்தில் கடந்த ஆண்டு கரோனா 2வது அலையின்போது, மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று தேனி. எனவே, நோய்ப் பரவலை கட்டுப்படுத்த தேனி மாவட்ட சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதற்காக தமிழக அரசு இம்மாவட்டத்துக்கு சுமார் ரூ.1 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்தது.
அந்த நிதியின் மூலம் கரோனா நல மையங்களுக்கு தேவையான பொருட்கள், முகக்கவசம், சானிடைசர், மருந்துகள் போன்றவை வாங்கப்பட்டதாக கணக்கு எழுதப்பட்டது. ஆனால், உண்மையில் அரசு ஒதுக்கிய சிறப்பு நிதியை முறையாக செலவு செய்யவில்லை என்றும், பல்வேறு அமைப்பினர் நன்கொடையாக வழங்கிய கரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் பொருட்களை விலை கொடுத்து கொள்முதல் செய்து வாங்கியது போல் கணக்கு காட்டியிருக்கிறார்கள் என்றும், இதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் தேனி மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது.
அதைத்தொடர்ந்து இந்த நிதி முறைகேடு குறித்து விசாரணை நடத்தவும், தணிக்கை செய்யவும் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவின்பேரில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கரோனா 2-வது அலையின் போது ஒதுக்கிய சிறப்பு நிதிக்கான செலவு விவரங்களை முழுமையாக தணிக்கை செய்தனர். அப்போது பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விசாரணை அறிக்கையை அக்குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கு, மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பரிந்துரை செய்துள்ளார். அந்த பரிந்துரையோடு, விசாரணை அறிக்கையையும் பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ளார் மாவட்ட ஆட்சியர். 2-வது அலையின் போது தேனியில் பணியாற்றிய சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலர் தற்போது வேறு மாவட்டங்களுக்கு பணி இடமாற்றத்தில் சென்றுவிட்டனர். ஆனாலும் இந்த விவகாரத்தில் அவர்களும் தப்ப முடியாது என்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.