ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தவரை காப்பாற்றிய ரயில்வே போலீஸார்

By கி.பார்த்திபன்

ஓடும் ரயிலில் இருந்து இறங்க முற்பட்டபோது, தவறி தண்டவாளத்தில் விழ இருந்த இளைஞரை, ஈரோடு ரயில்வே போலீஸார் விரைந்து காப்பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நேற்று முன்தினம் செகந்திராபாத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. இந்த ரயிலில் அசோக் தாஸ் என்ற இளைஞர் முன்பதிவு செய்து பணித்துள்ளார். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். விடுமுறைக்கு ஊருக்குச் சென்றவர், மீண்டும் திரும்பி ஈரோட்டுக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தார்.

ரயில், ஈரோடு நிலையத்துக்கு வந்தபோது அவர் உறங்கிக் கொண்டிருந்தார். பிறகு, ரயில் கிளம்பத் தொடங்கியபோது விழித்த அசோக்தாஸ், அவசர அவசரமாக எழுந்து தனது உடைமைகளை வெளியே வீசிவிட்டு இறங்க முற்பட்டுள்ளார். எதிர்பாராத விதமாக தவறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே விழுந்தார்.

அசோக் தாஸைக் காப்பாற்றும் ரயில்வே போலீஸார்

அப்போது, அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த தலைமை காவலர்கள் பழனிசாமி, கிருஷ்ணன் ஆகியோர் விரைந்து செயல்பட்டு அசோக்தாஸைப் பிடித்து இழுத்து அவரைக் காப்பாற்றினர். பின்னர் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

ரயில்வே போலீஸார் வடமாநில இளைஞரைக் காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. மேலும், விரைந்து செயல்பட்டு, அசோக்தாஸைக் காப்பாற்றிய தலைமைக் காவலர்களை காவல் துறை அதிகாரிகள் பாராட்டினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE