ஈழப்போரில் இறந்தவர்களுக்கு 15-ம் ஆண்டு நினைவஞ்சலி @ தஞ்சாவூர்

By வீ.சுந்தர்ராஜன்

தஞ்சாவூர்: இறுதிக் கட்ட ஈழப்போரின் போது இறந்தவர்களுக்கு இடதுசாரிகள் பொது மேடை சார்பில் 15-ம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் தஞ்சாவூரில் இன்று (மே 17) நடத்தப்பட்டது.

கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் கொத்துக் கொத்தாக ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கான 15-ம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. நினைவஞ்சலி கூட்டத்துக்கு உலக தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அய்யனாபுரம் சி.முருகேசன் தலைமை வகித்தார்.

கடந்த 2009-ம் ஆண்டு நடந்த தமிழீழப் போரில் சுமார் 1.75 லட்சம் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான ஆண், பெண், சிறுவர், சிறுமியர் காணாமல் போயினர். ஈழத்தில் சிங்கள குடியேற்றம் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன் முள்வேலி முகாம்களும் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்திய அரசு இலங்கைக்கு அளித்த நிவாரணங்கள் எதுவும் ஈழத் தமிழர்களுக்கு சென்றடையவில்லை.

எனவே ஐ.நா. சபை தலையிட்டு ஈழத் தமிழர்களுக்கு அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தரவும், தழிழர் பகுதியில் பொதுவாக்கெடுப்பு நடத்திடவும், சர்வதேச நாடுகள் போர்குற்றவாளியான இலங்கை அரசை தண்டிக்கவும் வேண்டுமென அஞ்சலி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE