ராக்கெட் ராஜாவுக்கு என் மேல பொறாமை...

By கே.எஸ்.கிருத்திக்

ரவுடி ராக்கெட் ராஜா நடத்துகிற ‘பனங்காட்டுப் படை கட்சி’யின் ‘நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக’ கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், நடமாடும் நகைக்கடையுமான ஹரி நாடார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கப்பட்டது தென்மாவட்டங்களில் பேசப்படும் செய்தியாகியிருக்கிறது.

நெல்லை, தூத்துக்குடியைத் தவிர மற்றவர்களுக்கு ஹரி நாடாரைத் தெரிந்த அளவுக்கு அவரது கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாடார் சமுதாயத்தில் பிரபலமான ரவுடி அவர். அவரும் சுபாஷ் பண்ணையாரும் (இவர் மீதும் வழக்குகளுக்குப் பஞ்சமில்லை) சேர்ந்து 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய கட்சிதான் பனங்காட்டுப்படை. கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே, நம்ம தரத்துக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று விலகிக்கொண்டார் சுபாஷ் பண்ணையார்.

ராக்கெட் ராஜாவும் சுபாஷ் பண்ணையாரும்...

கத்தி பிடிக்கத் தெரியும், கட்சியை எப்படி நடத்துவது என்று கலங்கி நின்ற ராக்கெட் ராஜாவுக்கு, வாய்த்த சிறந்த அடிமைதான் ஹரிநாடார். ஏற்கெனவே சிங் நாடார், வெங்கடேஷ் பண்ணையாருடன் சுற்றியவர், பனங்காட்டுப் படை கட்சி தொடங்கியபோது ராக்கெட் ராஜாவுடன் ஒட்டிக்கொண்டார். ரவுடி என்பதற்கான எந்த அங்கலட்சணமும் இல்லாத ஹரி, உடல் முழுக்க நகைகளை அணிந்து அந்த கெத்தை ஏற்படுத்த முயன்றார். காமெடியான அந்தத் தோற்றமே அவரது அடையாளமாகிப்போனது.

தொழில் அதிபர்களின் மறைமுகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தருவது, பெரும் பணக்காரர்களுக்கு இந்தியாவின் எந்த மாநில வங்கியிலும் லஞ்சம் கொடுத்து கோடிக் கணக்கில் கடன் வாங்கித்தருவது போன்றவற்றையே தொழிலாகக் கொண்டவர் என்பதால், ஹரியிடம் பணத்துக்குப் பஞ்சமில்லை. இரக்க குணமும், விளம்பர மோகமும் கொண்டவர் என்பதால், பார்க்கிறவர்கள் எல்லோருக்கும் பணத்தை வாரி இறைப்பவர் ஹரி. எனவே, இவர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆனதும், காசுக்காக கூட்டம் கூட ஆரம்பித்தது. கூடவே, நடமாடும் நகைக்கடையாக சுற்றியதால், இவரை வேடிக்கை பார்ப்பதற்கென்றே பெண்களும், குழந்தைகளும் கூட ஆரம்பித்தார்கள். இதனால் கட்சியின் நட்சத்திரத் தலைவரானார் ஹரி.

2019-ல் நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தல் வந்தபோது, பனங்காட்டுப் படை சார்பில் யாரை வேட்பாளராக இறக்கலாம் என்று யோசித்தபோது, நானே போட்டியிடுகிறேன் என்று முன்னால் வந்து நின்றவர் ஹரி. வேட்பாளரானதும் நாடார் மக்கள் வாழ்கிற ஊர்கள் ஒன்றுவிடாமல் சுற்றுப்பயணம் போனார் ஹரி. அவரை வேடிக்கை பார்க்க கூட்டம் கூடியது. தேர்தலில் 3-ம் இடத்தைப் பிடித்து ஆச்சரியப்பட வைத்தார் ஹரி. 3-ம் இடத்துக்கு வரும் என்று சொல்லப்பட்ட நாம் தமிழர் கட்சியைவிட, இருமடங்கு அதிக ஓட்டு வாங்கியிருந்தார் ஹரி.

ஹரி நாடார்

ஆலங்குளம்...

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டார் ஹரி. இந்தத் தேர்தலில், தனக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்த பனங்காட்டுப் படை தலைவர் ராக்கெட் ராஜாவுக்கு நன்றி நன்றி என்று பத்திரிகைகளில் விளம்பரம் எல்லாம் கொடுத்து கவுரவித்த ஹரி, அவரை பிரச்சாரத்துக்கும் வரச் சொன்னார். தலைவர் பின்னால் இவர் பவ்யமாக நடந்துவர, மக்களோ, “யோவ் யாருய்யா அது... ஹரி நாடாரை மறைக்கிறது தள்ளி நில்லுய்யா” என்று சொல்லாத குறையாக, ராக்கெட் ராஜாவை நடத்தியிருக்கிறார்கள். ‘இது சரிப்பட்டு வராது’ என்று பிறகு பிரச்சாரத்துக்கு வருவதையே நிறுத்திக்கொண்டார் ராக்கெட்.

அவரது பணபலம் காரணமாக, பலாப்பழத்தை ஈ மொய்ப்பது மாதிரி இளைஞர்கள் மொய்த்தார்கள். இதெல்லாம் தேர்தலில் எதிரொலிக்காது என்று நினைத்தவர்களுக்கு அதிர்ச்சி. மனிதர் 38 ஆயிரம் ஓட்டு வாங்கி, தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டு வாங்கிய சுயேச்சை என்ற பெருமையைப் பெற்றார். கூடவே, அங்கே ஜெயிக்கவேண்டிய பூங்கோதை ஆலடி அருணாவின் தோல்விக்கும் காரணமானார். ஆனால், ஓட்டு எண்ணிக்கையின்போது ஹரி கம்பி எண்ணிக்கொண்டிருந்தார். காரணம், பெங்களூருவைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவருக்கு குறைந்த வட்டிக்கு கடன் வாங்கிக் கொடுப்பதாக 16 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், ஹரி நாடார் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் சிறைக்குப் போய் 8 மாதமான நிலையில்தான், சீமானுக்கு ஆதரவாக அவரது முன்னாள் காதலி விஜயலட்சுமியை மிரட்டிய வழக்கில், மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார் ஹரிநாடார். அவர் கைது செய்யப்பட்ட செய்தி தமிழ்நாட்டின் அனைத்துப் பத்திரிகைகளிலும் படத்துடன் வெளியானது. அதன் தொடர்ச்சியாகவே, இன்று அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிக்கை விட்டிருக்கிறார் கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா.

நீக்கம்...

ராஜாதி ராஜ...

அவர் மோசடியில் ஈடுபட்டது, ரவுடித்தனம் செய்ததுதான் கட்சியில் இருந்து நீக்கப்பட காரணம் என்று ராக்கெட் ராஜா சொல்லியிருக்கிறார். ஆனால், ஹரிநாடாரோ இதை மறுத்திருக்கிறார். இதுகுறித்து அவரது வழக்கறிஞர் மூலம் ஹரி நாடாரின் கருத்தை காமதேனு இதழுக்காக கேட்டோம்.

“நான் யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்ததில்லை. முழுக்க முழுக்க அண்ணன் ராக்கெட் ராஜாவின் விசுவாசியாகவே இருந்தேன். எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் அதிமுகவினர் ஜெயலலிதா பெயரைச் சொல்வதுபோல, நான் அண்ணன் பெயரைச் சொல்லித்தான் பேசவே ஆரம்பிப்பேன். அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அத்தனை நிர்வாகிகளையும் அரவணைத்துச் சென்றதும், கட்சி நடத்த பணம் செலவழித்ததும் நான்தான். எனக்குக் கிடைத்த புகழ் வெளிச்சத்தை தலைவர் ராக்கெட் ராஜாவால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

இதனால் சில திரைமறைவு வேலைகளைப் பார்த்தார். நானும் என்னுடைய மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்துவாழ்கிறோம். அவரது ஒப்புதலுடன் சட்டப்படி விவாகரத்து பெறும் முயற்சியும் நடக்கிறது. இந்த நேரத்தில் என் மனைவியைத் தூண்டிவிட்டு, உள்ளூர் போலீஸ் நிலையம் முதல் எஸ்பி வரையில் புகார் அனுப்ப வைத்தார் ராக்கெட் ராஜா. என்னை எப்படியும் கட்சியை விட்டு நீக்குவார் என்று நினைத்தேன்.

நான் சீமானுக்காக நடிகை விஜயலட்சுமியை மிரட்டியது எல்லாம் ராஜா அண்ணனுக்குத் தெரியும். அவர் சம்மதத்துடன்தான் இந்த விவகாரத்தில் தலையிடவே செய்தேன். ஆனால், இப்போது என்னவோ தனக்குத் தெரியாமல் நடந்துவிட்டது போல பாவனை செய்து என்னை கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார்.

இப்படி நடக்கும் என்று எனக்குத் தெரியும். எனவே, இப்படியெல்லாம் நடந்தால் என்ன செய்வது என்று என்னுடைய நலம் விரும்பிகளுடன் ஏற்கெனவே ஆலோசனை செய்திருக்கிறேன். ‘நீ தான் ஹரி, பனங்காட்டுப் படை கட்சி. நீ இல்லையென்றால் கட்சியே இல்லை. எனவே, துணிந்து ‘பனங்காட்டுப் படை கழகம்’ என்றொரு கட்சியைத் தொடங்கு. அப்புறம் பார் வேடிக்கையை’ என்று சொல்லியிருக்கிறார்கள். விரைவில் விடுதலையாகி வருவேன். அப்போது இந்த ஹரியின் இன்னொரு முகத்தைப் பார்ப்பீர்கள்” என்று ஹரி சொன்னதாகச் சொன்னார் அந்த வழக்கறிஞர்.

சிரிக்காதீங்க மக்களே... அண்ணன் வெளியே வரட்டும். மாபெரும் அரசியல் மாற்றம் இந்த மண்ணில் நிகழத்தான் போகிறது. அதைப் பார்க்கத்தான் போகிறீர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE