நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயர் என்னும் தகுதியை எட்டிப்பிடிக்க திமுக, பாஜக இடையே கடும் போட்டி நடக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொங்கல் பரிசு 5 ஆயிரம் எங்கே என பாஜகவும், 15 லட்சம் என்னாச்சு என பாஜகவும் போஸ்டர் ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தின. இந்தப் போஸ்டர் யுத்தம் இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பாஜகவோ, போஸ்டர் தொடரும் என பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
திமுகவின் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் ஒட்டியுள்ள போஸ்டரில், ‘நாங்கள் விமான நிலையங்களை கூவி... கூவி விற்கமாட்டோம். ரூபாய் 15 லட்சம் தருவதாக பித்தலாட்ட வாக்குறுதி கொடுக்க மாட்டோம். வங்கிகள் பி.எஸ்.என்.எல் போன்ற ஏராளமான இந்திய பொதுநிறுவனங்களை அழிக்கமாட்டோம். எங்கள் உயிரைக் கொடுத்தாவது சகோதரத்துவம், சமூகநீதி, சமத்துவம் காப்போம்’ என கிழக்கு மாவட்ட திமுக சார்பில் போஸ்டர் போட்டுள்ளார். இதைப் பார்த்து மீண்டும் சீற்றமான பாஜகவினர் பதிலுக்கு இன்னொரு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
பாஜகவினர் ஒட்டியுள்ள, ‘அறிவாலய அரசே... பதில் சொல்’ என்னும் போஸ்டரில், ’கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி என்னாச்சு? மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி என்னாச்சு? மாணவர்கள் கல்விக்கடன் தள்ளுபடி என்னாச்சு? இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 1000 என்னாச்சு?’ என போட்டுவிட்டு, கடைசியில் ‘இது தொடரும்’ என குமரி மாவட்ட பாஜக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இப்படி திமுக, பாஜக இடையே நடக்கும் இந்தப் போஸ்டர் யுத்தத்தில், அதிமுக வெறும் பார்வையாளராக மட்டுமே சுருங்கிப் போயுள்ளதாகப் பேச்சும் எழுந்துள்ளது.