டெல்டா விவசாயிகளுக்காக ரூ.78 கோடியில் குறுவை தொகுப்பு திட்டம்: முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளதாக அமைச்சர் தகவல்

By KU BUREAU

சென்னை: மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில், டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி ரூ.78.67 கோடி மதிப்பில் குறுவை தொகுப்புதிட்டத்தை முதல்வர் ஸ்டாலின்வழங்கி உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜுன்12-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய நீர்இல்லாததால், டெல்டா சாகுபடிக்குநீரை திறந்துவிட காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இது மிகுந்த மனவேதனையைத் தந்தாலும் விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி, ரூ.78.67 கோடி மதிப்பில் குறுவைசாகுபடி தொகுப்பை வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு, 2 ஆயிரம் டன் நெல் விதைகள் மானிய விலையில் ரூ.3.85 கோடியில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்படும்.

நெற்பயிர் இயந்திர நடவு பின்னேற்பு மானியமாக ஒரு ஏக்கருக்குரூ.4 ஆயிரம் வீதம் ஒரு லட்சம் ஏக்கருக்கு ரூ.40 கோடி நிதி வழங்கப்படும். நுண்ணூட்டச் சத்து குறைபாடுள்ள 7,500 ஏக்கர் பரப்பளவுக்கு, நெல் நுண்ணூட்டக் கலவை 50 சதவீத மானியத்தில் விநியோகிக்க ரூ.15 லட்சம் வழங்கப்படும்.

துத்தநாக சத்து குறைபாடு உள்ளஇடங்களில், துத்தநாக சல்பேட் உரத்தை பயன்படுத்த, ஏக்கருக்கு ரூ.250 வீதம், 25 ஆயிரம் ஏக்கருக்கு ரூ.62.50 லட்சமும், ஜிப்சம் பயன்படுத்துவதற்காக ஏக்கருக்கு மானியமாக ரூ.250 வீதம் ரூ.62.50 லட்சமும் வழங்கப்படும்.

பயறு வகைப் பயிர்களை 10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்ய, 50 சதவீத மானியத்தில் தரமான விதைகள், சூடோமோனாஸ், திரவ உயிர் உரங்கள் மற்றும் இலை வழி உரம் தெளிக்க ரூ.1.20 கோடியும், பயறுவகைப் பயிர்களில் மகசூல் திறனை அதிகரிக்க 50 சதவீத மானியத்தில் 10 ஆயிரம் ஏக்கருக்கு நுண்ணூட்டச்சத்து வழங்க ரூ.20 லட்சம் நிதியும் வழங்கப்படும்.

வேளாண்மை பொறியியல் துறை மூலம் விசை உழுவை, களையெடுக்கும் கருவி, விதை மற்றும் உரமிடும் கருவி, இயந்திரக் கலப்பை, சுழற் கலப்பை, சாகுபடிக் கலப்பை, பலதானியம் பிரித்தெடுக்கும் கருவி, ஆளில்லா வானூர்தி கருவி மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட் போன்ற 442 கருவிகள் வழங்க மானியமாக ரூ.7.52 கோடி நிதி வழங்கப்படும்.

டெல்டா மாவட்டங்களில் வேளாண் பணியில் ஈடுபடுவோருக்கு ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பு இழப்பை ஈடுசெய்யும் பொருட்டு மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புகளை வழங்க ரூ.24.50 கோடி நிதி ஒதுக்கப்படும்.

இவ்வாறு அரசு நிதியில் இருந்து நிதி பெற்றும், பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்தும் ரூ.78.67 கோடி மதிப்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளபதிவில், ‘பருவமழை தாமதமாகிவருவதால் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன் பாதிப்படையக் கூடாது என டெல்டா குறுவை சாகுபடி சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளோம். இத்திட்டத்தின் பயன் முறையாக சென்று சேர்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேணடும்’ என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE