மதம்மாறச் சொன்னதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் கூறிய நிலையில், “மதமாற்றம் என்பதற்கு தமிழ்நாட்டில் இடமே இல்லை. எம்மதமும் சம்மதமே. அனைத்து மதமும் சம்மதம்” என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையம் கீழத்தெருவைச் சேர்ந்த முருகானந்தம்-கனிமொழி தம்பதியின் மகள் லாவண்யா(17), தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கிப் படித்த லாவண்யா, கடந்த 9-ம் தேதி விஷம் குடித்துள்ளார். “விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்யவேண்டும் என்று வார்டன் கூறியதால் ஏற்பட்ட மன உளைச்சலால், விஷம் குடித்துவிட்டதாக வாக்குமூலம் அளித்தார் லாவண்யா. இதையடுத்து, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரியை(62) கைது செய்தனர். இந்நிலையில் கடந்த 19-ம் தேதி சிகிச்சை பலனின்றி லாவண்யா இறந்துபோனார்.
இதனிடையே, தனது மகளை கட்டாய மதமாற்றம் செய்ய பள்ளிநிர்வாகம் முயற்சித்ததாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் அவரைத் திட்டி, அதிகமாக வேலைவாங்கியும், விடுதிக் கழிப்பறையை சுத்தம் செய்யச்சொல்லியும் வற்புறுத்தியுள்ளனர். இதனால், மன உளைச்சளுக்கு ஆளாகி தனது மகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார் என லாவண்யாவின் தந்தை முருகானந்தம் தெரிவித்திருந்தார். இதை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மறுத்தார்.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, “மதமாற்றம் என்பதற்கு தமிழ்நாட்டில் இடமே இல்லை. எம்மதமும் சம்மதமே. அனைத்து மதமும் சம்மதம். முதல்வரின் நிலையும் அதுதான்” என்றார்.