கட்சிப் பொறுப்பில் இருந்து விலகியது ஏன்?

By காமதேனு

திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகியது ஏன்? என்பது குறித்து, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக பணியாற்றி வந்தார். அரசுப் பணிகளில் முழுக் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், அப்பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியதால், அப்பொறுப்பிலிருந்து அவரை விடுவித்த திமுக தலைமை, அவருக்குப் பதிலாக கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக டி.ஆர்.பி.ராஜாவை நியமித்தது. பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கட்சிப் பதவியிலிருந்து விலகியது குறித்து பல்வேறு தகவல்கள் பரவின.

இந்த நிலையில், கட்சிப் பொறுப்பில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “2017-ம் ஆண்டு ஆரம்ப திட்டம் கூட இல்லாமல் இருந்து, தனித்துவம் மிக்க வலுவான அணியை கட்டமைத்து வழிநடத்திய ஒருவராய் தகவல் தொழிநுட்ப அணியின் ஓர் அங்கமாக இருப்பேன்.

ஒருவர் மறைந்த பிறகே அவரது உண்மையான மதிப்பு உணரப்படும் என்பதைப் போல், அணியை மேம்படுத்துவதற்கான தமது முயற்சிகளின் பலன்களை, டி.ஆர்.பி.ராஜா தலைமையின்கீழ் புதிய அணி எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை வைத்து மதிப்பிட்டுவிடலாம். பணம், பதவி, பொறுப்பு போன்றவை எப்போது வேண்டுமானாலும் வந்துபோகும். திமுக மீதான பற்று, அமைச்சர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளுக்கும் அப்பாற்பட்டது" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE