அமைச்சர் பி.மூர்த்திக்கு கரோனா தொற்று

By கே.எஸ்.கிருத்திக்

தமிழக வணிகவரித் துறை மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சரும், மதுரை கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பி.மூர்த்தி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளை முன்னின்று நடத்திய அவர், அதுதொடர்பான ஆலோசனை கூட்டங்களிலும் தொடர்ந்து பங்கேற்றார். கூட்ட நெரிசலிலும் இருக்கவேண்டிய சூழல் இருந்ததால், அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து இன்று மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘அமைச்சர் பி.மூர்த்தி(62) கோவிட் அறிகுறிகளுடன் நேற்று மருத்துவமனைக்கு வந்தார். ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியிருக்கிறது. லேசான தொற்றுதான் என்றாலும், மருத்துவக் குழுவினர் அவரைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் முடிந்த திட்டப் பணிகளின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் கரோனா காரணமாக அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE