மதுரை: மதுரை உத்தபுரத்தில் 9 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் முத்தலாம்மன் கோயிலை திறந்து வழிபாடு நடத்தக்கோரிய மனுவுக்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உத்தபுரத்தைச் சேர்ந்த சந்திரா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'பேரையூர் வட்டம் உத்தபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நூற்றாண்டுப் பழமையான முத்தாலம்மன் கோயில் மற்றும் மாரியம்மன் கோயில் உள்ளன. இந்த கோயிலில் பங்குனி மற்றும் புரட்டாசி மாதங்களில் திருவிழா நடைபெறும். ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக கோயிலை வருவாய்த்துறையினர் பூட்டி வைத்துள்ளனர்.
இதனால் கோயிலில் பூஜைகள், வழிபாடு நடைபெறவில்லை. பொதுமக்கள் நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் கோயிலில் பொங்கல் வைக்க அனுமதி கோரி வருவாய்த்துறை மற்றும் காவல்துறையிடம் மனு அளித்தோம். போலீஸார் அனுமதி வழங்காமல் உள்ளனர். கோயில் பூட்டி இருப்பதால் உத்தபுரம் மக்கள் மிகுந்த மனவேதனையுடன் உள்ளனர். உத்தபுரம் முத்தாலம்மன் கோயிலை திறந்து வழிபாடு நடத்தவும், நேர்திக்கடன் செலுத்தவும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்' என கோரி இருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ''கோயில் பூட்டியிருப்பதால் அப்பகுதி மக்களின் வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. எனவே நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டது.
» விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி: தமிழிசையை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை!
» தூத்துக்குடியில் 4,000 நாட்டுப் படகுகளில் அதிகாரிகள் குழு ஆய்வு
இதையடுத்து, இந்த மனு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.