அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டுக்கு முன்பாக தர்மபுரி பகுதி அதிமுவினர், லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனையை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார். அதில், ‘2016 முதல் 2021-ம் ஆண்டுவரை உயர் கல்வி அமைச்சராக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாகவும், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்த வேண்டும்’ என கேட்டு கொண்டார். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீஸார் கே.பி அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவுசெய்தனர்.
பின்னர், லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், கே.பி. அன்பழகன் தேர்தலின்போது கணக்குக்காட்டிய சொத்துகளின் மதிப்பை விட அவர் பெயரிலும், அவரது உறவினர் பெயரிலும் பல கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகள் குவித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பாக்கியலட்சுமி தியேட்டர்ஸ், புளூ மெட்டல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் 50% பங்குதாரராகவும், மகன் சசிமோகன் பெயரில் ஏ.எம்.பி.எஸ் நிறுவனம், சந்திரமோகன் பெயரில் அன்பு ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நடத்திவருதுடன், சரஸ்வதி பழனியப்பன் என்ற பெயரில் டிரஸ்ட் நடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது
இந்த சொத்துகளை அடிப்படையாக வைத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 2016-ம் ஆண்டு கே.பி அன்பழகனின் வங்கி இருப்பு, சொத்து மதிப்பு, நகைகள் என அவரது சொத்து மதிப்பு 1,60,50,859 கோடி ரூபாய் என இருந்ததாகவும், 2021 ஆண்டின்போது அவரது சொத்துமதிப்பு 23,03,86,277 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதாவது, அவரது வருமானத்தை அடிப்படையாக வைத்து கணக்கிட்டால் அவரது தற்போதைய சொத்துமதிப்பு 10,10,39,663 இருந்திருக்க வேண்டும். ஆனால், வருமானத்துக்கு அதிகமாக கே.பி.அன்பழகன் 11,32,95,755 கோடி ரூபாய் சொத்து சேர்த்திருப்பதை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கண்டுபிடித்தனர்.
மேலும், அன்பழகனின் மருமகன் ரவிசங்கர் பெயரில் தர்மபுரியில் கலவை ஆலை, கல்குவாரி ஆலை, மைத்துனர் பெயரில் எம் சாண்ட் நிறுவனம், அசோசியேட் அங்குராஜ் பெயரில் புளூ மெட்டல்ஸ் நிறுவனம், சென்னை கோபாலபுரத்தில் அன்பழகனின் தங்கை பெயரில் கணேஷ் கிரானைட் நிறுவனமும் நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் கே.பி அன்பழகன் அவரது பெயரிலும், அவரது உறவினர்களின் பெயரிலும் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் பல கோடி ரூபாய் சொத்துகள் வாங்கிக் குவித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்பேரில் இன்று சென்னை, தர்மபுரி, சேலம்,கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கே.பி அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கெனவே, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து சோதனை நடத்திய நிலையில், தற்பொழுது 6-வது அமைச்சராக கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்துவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கே.பி.அன்பழகன் வீட்டுக்கு முன்பாகக் கூடிய தர்மபுரி பகுதி அதிமுவினர், லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனையை எதிர்த்து கோஷமிட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.