பழநி: ரோப் காரில் பக்தர்கள் சிக்கிக் கொண்டால் மீட்பது குறித்து ஒத்திகை நிகழ்வு

By ஆ.நல்லசிவன்

பழநி: பழநி மலை முருகன் கோயில் ரோப் காரில் சிக்கிக் கொள்ளும் பக்தர்களை மீட்பது குறித்தான ஒத்திகை இன்று நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல படிப்பாதை, யானைப் பாதை, மின் இழுவை ரயில் (வின்ச்) மற்றும் ரோப் கார் ஆகிய வசதிகள் உள்ளன. இதில் ரோப் காரில் 3 நிமிடங்களில் மலைக்கோயிலை அடையலாம். இதனால் ரோப் காரில் அதிகளவில் பக்தர்கள் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில், பழநி மலைக்கோயிலுக்கு செல்லும் ரோப் காரில் பயணிக்கும் போது எதிர்பாராதவிதமாக ஏற்படும் விபத்துக்களை எதிர்கொள்ளும் அவசர கால மீட்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் இன்று காலை நடத்தப்பட்டது. துணை கமாண்டர் சங்கர பாண்டியன் தலைமையில் 27 பேர் கொண்ட வீரர்கள் ஒத்திகை பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்தரத்தில் தொங்கியபடி நின்றிருந்த ரோப் காரில் சிக்கிக் கொண்ட பக்தர்களை வீரர்கள் பாதுகாப்பாக மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது போன்று செயல் விளக்கம் அளித்தனர். இதில், கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, பழநி கோட்டாட்சியர் சரவணன், கோயில் பணியாளர்கள், தீயணைப்பு துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE