ஆட்சியர் அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

By காமதேனு

ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் மாதிரி தோற்றம்

தமிழ்நாட்டில் 38 - வது மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக ஆட்சியர் அலுவலகம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக இன்று அடிக்கல் நாட்டினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் அமைக்க வேண்டும் என்று பல வருடங்களாக அப்பகுதி மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அதனை ஏற்று கடந்த அதிமுக ஆட்சியில் 2020 -ம் ஆண்டு மார்ச் 24 -ல் தமிழக சட்டப்பேரவையில் மயிலாடுதுறை மாவட்டம் ஏற்படுத்த அறிவிப்பை வெளியிட்டார் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஏப்ரல் 7-ம் தேதி அதற்கான அரசு அறிவிக்கை வெளியிடப்பட்டு, தனி அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி லலிதா நியமிக்கப்பட்டார். மாவட்ட எல்லைகள் வகுக்கப்பட்டு டிசம்பர் 28 -ம் தேதி முறைப்படி மயிலாடுதுறை மாவட்டம் ஏற்படுத்தப்பட்டது. முதலில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டது. அதன்பிறகு வணிகவரித் துறை அலுவலகத்தில் தற்போது செயல்பட்டு வருகிறது.

ஆட்சியர் அலுவலகம் அமைக்க அரசின் சார்பில் இடம் தேடப்பட்ட நிலையில் தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தேவையான 21 ஏக்கர் நிலம் மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் கையளிக்கப்பட்டது. அந்த இடத்தில் கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டு இன்று அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், ராஜ்குமார், பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை மூங்கில் தோட்டம் பால்பண்ணை அருகே தருமபுரம் ஆதீனத்தால் வழங்கப்பட்ட 8.57 ஏக்கர் நிலத்தில் 114. 48 கோடி மதிப்பீட்டில் புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் அமைகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE