விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி: தமிழிசையை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை!

By துரை விஜயராஜ்

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழிசை சவுந்தரராஜன் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று அவரை சந்தித்தார். இதையடுத்து இதுவரை விவாதத்துக்கு உள்ளாகி வந்த பிரச்சினைக்கு இருவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழா கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி, முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி.நட்டா, நிதின் கட்கரி, தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.விழாவின் போது, மேடையில் அமர்ந்திருந்தவர்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் வணக்கம் தெரிவித்தவாறு சென்றார். அப்போது, வெங்கய்ய நாயுடு, அமித் ஷாவும் பேசிக் கொண்டிருந்தனர். இருவருக்கும் வணக்கம் வைத்துவிட்டு, சென்ற போது, தமிழிசையை அழைத்து, அமித் ஷா அவரிடம் கண்டிப்புடன் பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அண்ணாமலையும், தமிழிசையும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்த நிலையில், தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்திருப்பதாகவும், அண்ணாமலைக்கும், தமிழிசைக்கும் இடையே மோதல் போக்கு இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இதனால் தான், விழா மேடையில் வைத்து, தமிழிசையை அமித் ஷா கண்டித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், விழா முடிந்து சென்னை திரும்பிய தமிழிசையிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கும் பதில் எதுவும் கூறாமல், அவசர அவசரமாக அவர் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். எனவே, அமித் ஷா, தமிழிசையை கண்டித்தது உண்மையாக இருக்குமோ? என்ற சந்தேகமும் பாஜகவினரிடையே நிலவியது.

தொடர்ந்து, இது தொடர்பான செய்திகளும் வெளியான நிலையில், தமிழிசை இதற்கு விளக்குமளித்து நேற்று தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘மக்களவைத் தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக ஆந்திராவில் அமித் ஷாவை சந்தித்தேன். அப்போது, தேர்தலுக்கு பிறகான தொடர் நடவடிக்கைகள், எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கேட்பதற்காகவே என்னை அமித் ஷா அழைத்தார். நானும் அது தொடர்பாகவே அவரிடம் விரிவாக எடுத்து கூறினேன். அவரும் எனக்கு, பல அறிவுரைகளை வழங்கினாரே தவிர, கண்டிக்கவில்லை,’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அண்ணாமலைக்கும், தமிழிசைக்கும் இடையே மோதல் போக்கு இருப்பதாக பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அண்ணாமலை வெள்ளிக்கிழமை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜன் வீட்டுக்கேச் சென்று அவரை சந்தித்தார். அப்போது தமிழிசைக்கு புத்தகங்களை வழங்கி அவரிடம் சில நிமிடங்கள் பேசினார். இது தொடர்பாக, அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், ‘மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், பாஜக மாநில தலைவராக திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்துக்கு நேரில் சென்று அவரை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.

தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா தமிழிசை சவுந்தரராஜனின் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது,’ என குறிப்பிடுள்ளார்.இதேபோல் தமிழிசை சவுந்தரராஜனும் தனது எக்ஸ் தளத்தில், ‘தமிழக பாஜக தலைவர் அன்புத் தம்பி அண்ணாமலையை சந்தித்ததில் மகிழ்ச்சி,’ என தெரிவித்துள்ளார். இவர்களது சந்திப்பின் மூலம் இதுவரை விமர்சிக்கப்பட்டு வந்த பிரச்சினைக்கு இருவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE