கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்செல்வவிளை கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாபுராஜின் வாசிப்பு ஆர்வம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. வீட்டிலேயே நூலகம் அமைக்குமளவுக்கு வாசிப்பில் உயர்ந்து நிற்கிறார் இந்த காக்கிச் சட்டைக்காரர்.
ஆட்டோ ஓட்டுநராக இருந்தாலும் வாசிப்பை மூச்சாக கொண்ட பாபுராஜ் தன்னால் முடிந்த அளவுக்கு புத்தகங்களை வாங்கிச் சேர்த்து தனது வீட்டுக்குள்ளேயே நூலகம் அமைத்துள்ளார். அதன் மூலம் தன் சுற்றுவட்டார பகுதிமக்களுக்கும் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டிவரும் பாபுராஜ், அவர்களுக்கு இலவசமாக வாசிக்க நூல்களைக் கொடுக்கிறார். நடமாடும் நூலகம் போல், தனது ஆட்டோவில் வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே போய் தரமான புத்தகங்களை இலவசமாக படிக்கக் கொடுக்கிறார்.
இதுகுறித்து காமதேனு இணையத்திடம் பேசிய பாபுராஜ், “எனக்குப் பள்ளிகூடப் படிப்பு குறைவுதான். ஆனால், இலக்கியம் சார்ந்த வாசிப்பு பழக்கம் ஆரம்பத்திலிருந்தே உண்டு. சின்ன வயதில் இருந்தே நூலகத்திற்குப் போய் புத்தகங்கள் வாசிப்பேன். ஏட்டுக்கல்வி தராத அறிவை எனக்கு நூலகங்கள் தந்தன. ராஜேஷ்குமாரின் நாவல்கள் தான் எனக்கு வாசிப்பை அறிமுகம் செய்துவைத்தது. இப்போதும் நான் எத்தனையோ எழுத்தாளர்களின் புனைவு இலக்கியங்களைப் படித்தாலும் என் வாசிப்பு ஆசான் என்றால் அது க்ரைம் மன்னன் ராஜேஷ்குமார்தான். அவரது கதைகளே என்னை வாசிக்கத் தூண்டியது.
மாதத்தில் ஒரு நாள் மட்டும் ஆட்டோ ஓட்டிக் கிடைக்கும் முழு வருமானத்தையும் புத்தகங்கள் வாங்க ஒதுக்கிவிடுவேன். புத்தகக் கண்காட்சிகளுக்கென தனியாக குழந்தைகள் மிட்டாய் வாங்க காசு சேர்ப்பதைப் போல் சேர்த்து வைத்து புத்தகங்கள் வாங்கும் பழக்கமும் உண்டு. நான் படித்த நல்ல புத்தகங்களை நண்பர்களுக்கும் அறிமுகம் செய்கிறேன். வாசிப்பு மட்டும் தான் நம்மை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கும்” என்று சொன்னார்.