வஉசி, பாரதிக்கு பிரதமர் நினைவஞ்சலி செலுத்தியது நிபுணர் குழுவிற்கு தெரியாமல் போயிற்றா?

By காமதேனு

"வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழன் வஉசிதம்பரனார் ஆகியோரின் பிறந்த நாளுக்கும், மகாகவி பாரதியின் நினைவு நாளுக்கும் பிரதமர் ட்விட்டரில் நினைவஞ்சலி செலுத்தி இருந்தாரே, அது நிபுணர் குழுவிற்குத் தெரியாமல் போயிற்றா?" என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "குடியரசுத் தின அணி வகுப்புக்கு வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழன் வஉசிதம்பரனார், மகாகவி பாரதி போன்ற விடுதலை வேள்விக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தலைவர்களின் உருவங்களைத் தாங்கிய ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இவர்களை சர்வதேச அளவில் யாருக்கும் தெரியாது என அதிகாரிகள் பதிலளித்திருப்பதாக ஊடகங்கள் சொல்கின்றன. இவர்களை தெரியாது என்றால் வேறு எவரின் உருவங்களை வைக்கப் போகிறார்கள்? காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவையா? கோல்வார்க்கரையா- சாவர்க்கரையா?

இதெல்லாம் நிபுணர் குழுவின் முடிவு என்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. யார் அந்த நிபுணர்கள்? அவர்களது பெயர்களும் தகுதிகளும் வெளியிடப்பட வேண்டும். வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழன் வஉசிதம்பரனார் ஆகியோரின் பிறந்த நாளுக்கும், மகாகவி பாரதியின் நினைவு நாளுக்கும் பாரதப் பிரதமர் ட்விட்டரில் நினைவஞ்சலி செலுத்தி இருந்தாரே, அது நிபுணர் குழுவிற்குத் தெரியாமல் போயிற்றா?

பாஜக அரசை கடுமையாக விமர்சிக்கும் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களின் ஊர்திகள் மறுக்கப்பட்டுள்ளன. சமூகப் புரட்சியை நிகழ்த்திய நாராயணகுருவின் உருவத்திற்குப் பதிலாக ஆதி சங்கரரின் உருவத்தை வைக்கச் சொல்லி கேரள அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது என்கிறார்கள்.

பள்ளிப் பாடப்புத்தகத்தில், கல்லூரிகளில், அரசுத் தேர்வுகளில், மத்திய அரசு அலுவலகங்களில் என எங்கும் எதிலும் ஹிந்துத்துவாவைப் புகுத்த முயற்சித்துக் கொண்டே இருக்கும் பாஜக அரசு இப்போது தேசத்தின் குடியரசுத் தினத்திலும் தனது கைங்கர்யத்தைக் காட்டுகிறது? எதில்தான் அரசியல் செய்வது என்பதில் ஒரு வரைமுறை இல்லையா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE