பஞ்சாபில் பிப்ரவரி 20-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னியின் தம்பிக்குத் தேர்தலில் சீட் வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையும், அது தொடர்பாக முதல்வருக்கும், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையில் நிலவும் கசப்புணர்வும் கவனம் பெறுகின்றன.
சரண்ஜீத் சிங்கின் தம்பி மனோகர் சிங் ஜோகி, பஸ்ஸி பதானாவின் நந்த்பூர் கலோரில் உள்ள கரார் பொது மருத்துவமனையில் மூத்த மருத்துவ அதிகாரியாக (எஸ்.எம்.ஓ) பணியாற்றிவந்தவர். அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் குதிக்க முடிவெடுத்தார். பஸ்ஸி பதானா தொகுதியிலேயே போட்டியிடவும் விரும்பினார். இதுகுறித்து தனது அண்ணனும் முதல்வருமான சரண்ஜீத் சிங்கிடமும் பேசினார். அவருக்கு சீட் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு சீட் ஒதுக்க, பஞ்சாப் காங்கிரஸ் தலைமை மறுத்துவிட்டது. முதற்கட்டமாக வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து, சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்குவதாக மனோகர் சிங் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, முதல்வர் சரண்ஜீத் சிங் தனது தம்பிக்குக்கூட சீட் ஒதுக்க முடியாத அளவுக்குக் கட்சிக்குள் பலவீனமாக இருக்கிறார் என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அந்தத் தொகுதியில் ஏற்கெனவே எம்எல்ஏ-வாக இருக்கும் குர்ப்ரீத் சிங்குக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன் பின்னணியில், சித்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த மனோகர் சிங் ஜோகி, “தொகுதி நிலவரம் குறித்து கட்சித் தலைமைக்குத் தவறான தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. ‘முதல்வரின் சகோதரர் பஸ்ஸி பதானா தொகுதியில் வெற்றிபெற முடியாது. அவருக்கு இந்தத் தொகுதியில் செல்வாக்கு இல்லை’ என்றெல்லாம் தகவல்களைப் பரப்பி குழப்பிவிட்டது சித்துதான்” எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.
மேலும், “காங்கிரஸ் தொண்டர்கள் என் பக்கம் நிற்கிறார்கள். சுயேச்சையாகப் போட்டியிடுமாறு என் ஆதரவாளர்கள் கேட்டுக்கொண்டனர். அதனால்தான் அந்த முடிவை எடுத்தேன். ஒரு மருத்துவராக மக்களின் நாடித் துடிப்பை நான் அறிந்திருக்கிறேன்” என்று அவர் கூறியிருக்கிறார். தேர்தலில் போட்டியிடுமாறு பல்வேறு கவுன்சிலர்களும், கிராமத் தலைவர்களும் தன்னைக் கேட்டுக்கொண்டதால்தான், பணியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்ததாக அவர் கூறினார்.
சரண் ஜீத் சிங்கிடம் தனது நிலைப்பாட்டையும் தனது ஆதரவாளர்களின் நிலைப்பாட்டையும் எடுத்துச் சொல்லியிருப்பதாகவும், தனக்காக அவர் தன்னால் இயன்ற அளவுக்கு முயற்சி எடுத்தார் என்றும் மனோகர் சிங் கூறியிருக்கிறார்.
சரண்ஜீத் சிங்குக்கும் சித்துவுக்கும் இடையில் தொடர்ந்து மோதல்கள் நடந்துவருவது பலரும் அறிந்த செய்தி. இவ்விவகாரத்தில், வேறு ஒரு பகையும் இருக்கிறது. பஸ்ஸி பதானா தொகுதி எம்எல்ஏ-வான குர்ப்ரீத் சிங்குக்கும் மனோகர் சிங்குக்கும் இடையில் ஏற்கெனவே பிரச்சினை உண்டு. கேப்டன் அமரீந்தர் சிங்கின் அமைச்சரவையில் சரண்ஜீத் சிங் அமைச்சராக இருந்த காலகட்டத்தில், மனோகர் சிங்குக்குப் பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. அதற்கு குர்ப்ரீத் சிங் தான் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தான் அமைச்சரின் தம்பி என்று சொல்லியும் தனது வார்த்தைகள் செவிமடுக்கப்படவில்லை எனும் ஆதங்கம் மனோகர் சிங்குக்கு இருந்தது. அதுதான் அரசியலுக்கு வருவதற்கும், குர்ப்ரீத் சிங்கை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று முடிவெடுப்பதற்கும் காரணம் எனக் கருதப்படுகிறது.
அதேவேளையில், “என்னுடைய சகோதரர் முதல்வர் என்பதைக் காரணம் காட்டி நான் எனக்கு சீட் கேட்கவில்லை. நான் இங்கு செய்திருக்கும் பணிகளை வைத்தே எனக்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டேன்” என்றும் மனோகர் சிங் சொல்கிறார்.
ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு என பஞ்சாப் காங்கிரஸ் தலைமை விளக்கமளித்ததாகச் சொல்லப்படும் நிலையில், அரசியல் கட்சிகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு வாய்ப்பளிக்கப்படுவதை மனோகர் சிங் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
சரண் ஜீத் சிங்கையே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த காங்கிரஸ் தலைமை விரும்புகிறது என்பதைக் காட்டும் வகையில், அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொலி வெளியிடப்பட்டிருந்தது. அதை சித்து கொஞ்சமும் ரசிக்கவில்லை என்றே பேசப்படுகிறது. இதற்கிடையே, சரண்ஜீத் சிங்கின் தம்பிக்கு சீட் மறுக்கப்பட்டது அவருக்கு ஓரளவு நிறைவைத் தந்திருக்கும் என்றே காங்கிரஸ் கட்சியினர் கருதுகின்றனர்.
இந்தச் சூழலில், முதல்வர் தனது தம்பியைச் சமாதானப்படுத்துவாரா அல்லது அவருக்கு சீட் வழங்க கட்சித் தலைமையிடம் அழுத்தம் தருவாரா என்பதுதான் பஞ்சாப் தேர்தல் களத்தில் முக்கிய விவாதமாகியிருக்கிறது.