மதுரை அருகே, சக்கிமங்கலம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கு அனிதா(25), ஜோதிகா(23) என்ற மகள்களும், ஆதீஸ்வரன்(15), சிபிராஜ்(13) என்ற மகனும் உள்ளனர். ஏற்கெனவே அனிதா இறந்துவிட்ட நிலையில், கடந்த மாதம் லட்சுமியின் கணவர் நாகராஜனும் இறந்துவிட்டார். இளைய மகள் ஜோதிகாவும் தன்னுடைய கணவருடன் கோபித்துக்கொண்டு மகனுடன் தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். அப்போது மகள் ஜோதிகாவுக்கு கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதால், இதென்னடா சோதனைமேல் சோதனையாக இருக்கிறதே என்று விரக்தியடைந்த அவர்கள், குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவெடுத்தார்கள். விஷ மருந்தான குருணை மருந்தை சாப்பிட்டதில் லட்சுமியின் மகள் ஜோதிகாவும், பேரனும் இறந்துவிட்டார்கள். லட்சுமி மட்டும் உயிர் பிழைத்தார். ஏற்கெனவே கணவர் மற்றும் மூத்த மகளை இழந்த அவர், இந்தச் சம்பவத்தில் இளைய மகள், பேரனையும் இழந்து நிர்கதியானார்.
இந்தச் சூழலில் அவர் இன்று, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு ஒன்று கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“நோய்வாய்ப்பட்டிருந்த எனது கணவர் நாகராஜைக் காப்பாற்ற எவ்வளவோ போராடினோம். கையில் இருந்த பணத்தை எல்லாம் செலவிட்டும் அவர் கடந்த 4.12.2021 அன்று இறந்துபோனார். அவரது இறப்புக்குப் பிறகு, எனது மகள் ஜோதிகாவின் சொற்ப வருமானத்தில்தான் மொத்தக் குடும்பமும் உயிர் வாழ்ந்தது. எங்கள் அரைவயிற்றுக் கஞ்சிக்கு உழைத்த மகளுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. ஏற்கெனவே உச்சகட்ட வறுமையில் இருந்ததால், இதற்குமேல் தாங்க முடியாது என்று குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவெடுத்து, 5 பேரும் குருணை மருந்தை சாப்பிட்டோம். எனது மகன் ஆதீஸ்வரன் மட்டும் அதைத் துப்பிவிட்டான். அதில் மகள் ஜோதிகாவும், அவளது மகனும் இறந்துவிட்டார்கள். நானும், என் மகன் சிபிராஜும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டோம்.
தற்போது உறவினர் ஒருவர் வீட்டில்தான் இருக்கிறோம். என்னைச் சந்தித்த பலர், நீங்கள் எடுத்த முடிவு தவறு. எப்படியாவது 2 மகன்களையும் படிக்க வைத்துவிட்டால், நீங்கள் இந்த உலகில் வாழ முடியும் என்று அறிவுரை சொன்னார்கள். தற்போது எனக்கு எந்த வருமானமும் இல்லை. பையன்களும் சிறுவர்களாக உள்ளனர். மாண்மிகு முதல்வர் அவர்களின் உத்தரவுப்படி கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்படுவதாக அறிந்தேன். அந்த நிவாரணத்தை கரோனாவால் பாதிக்கப்பட்டுப் பின் தற்கொலை செய்துகொண்ட என் மகள் ஜோதிகாவுக்கும் வழங்கினால், நாங்கள் 3 பேரும் மறுவாழ்வு பெறுவோம். பிள்ளைகளையும் படிக்க வைக்க முடியும்”. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.