ஓபிஎஸ்சை நம்பி வந்தவர்கள் என்ன ஆனார்கள் - 7

By கே.கே.மகேஷ்

ஓபிஎஸ்சை நம்பி வந்தவர்கள் ஏமாந்த கதையையும், அமைதிப் புயலான அவரால் அரசியலில் அடையாளம் காணாமல் செய்யப்பட்டவர்களின் கதையையும் கடந்த 6 வாரங்களாகப் பார்த்தோம். இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். உள்ளூரையே எடுத்துக்கொண்டால், பெரியகுளம் முன்னாள் எம்பி-யான கூடலூர் முத்துமணி, பெரியகுளம் நகர அவைத் தலைவராக இருந்த பிச்சைமணி, போடி முன்னாள் எம்எல்ஏ-க்கள் வெ.பன்னீர்செல்வம், ராமராஜ், பெரியகுளம் முன்னாள் எம்எல்ஏ-வான எம்.பெரியவீரன், ஒன்றிய செயலாளர்கள் முறுக்கோடை ராமர், அன்னக்கொடி என்று பட்டியல் நீளும்.

முறுக்கோடை ராமர் விஷயத்துக்கு வருவோம். கடமலை மயிலை ஒன்றியத்தைச் சேர்ந்த முறுக்கோடை ராமர், ஓபிஎஸ் விசுவாசி. மூலவைகை ஓடிவருகிற வருஷநாடு மலைப்பகுதியிலேயே வைகை ஆற்றில் மணல் அள்ளி பிழைப்பு நடத்தியவர். அவருக்குப் போட்டியாக ஓபிஎஸ்சின் தம்பி ராஜாவும் தொழிலில் இறங்கினார். அவருக்கு தொழில் ஏற்பாடு செய்துகொடுத்ததே முறுக்கோடை ராமர்தான் என்று சொல்கிறார்கள். அப்புறம் என்ன, வரம் கொடுத்த சிவன் தலையிலேயே கை வைத்துவிட்டார் ஓ.ராஜா. ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆகும் கனவில் இருந்த ராமரின் கனவையும் கெடுத்துவிட்டுப் போய்விட்டார். மனிதர் இப்போது தொழிலையும் இழந்து, கட்சியிலும் பிடியில்லாமல் நிற்கிறார் ராமர்.

அன்னபிரகாஷைத் தெரியாத ஆளே இருக்க மாட்டார்கள். தேனி ஆட்சியர் அலுவலகம் அருகில் ஒரு மலைக்குன்றையே ஆக்கிரமித்து சுரண்டினாரே அதே அன்னபிரகாஷ்தான். 182 ஏக்கர் அரசு நிலம், பல நூறு கோடி கிராவல் சுரண்டலில் தொடர்புடைய இவர், அந்த கிராவலில் பெரும்பகுதியை ஓபிஎஸ்சின் தம்பி கட்டிய ரோஸி சிபிஎஸ்இ பள்ளியின் தரைத்தளத்துக்கும், விளையாட்டு மைதானத்துக்கும்தான் கொட்டிக் கொடுத்தார். இவரது மனைவி ஈஸ்வரி மாவட்ட ஊராட்சி கவுன்சிலரானார். அவரை மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவராக்க முயன்றார், அன்ன பிரகாஷ். வேண்டுமென்றே அவரைக் கழற்றிவிட்டுவிட்டு பாஜககாரர் ஒருவரை துணைத் தலைவராக்கிவிட்டார் ஓபிஎஸ். அதோடு நிற்கவில்லை. நில அபகரிப்பு விவகாரம் பெரிதானதும், அன்ன பிரகாஷை கட்சியை விட்டே நீக்கிவிட்டார் ஓபிஎஸ். இத்தனைக்கும் கிராவல் சுரண்டலுக்காக அவர் அபராதம் கட்டிக் கொண்டிருக்கிறார். அந்தக் கிராவலில் பாதியைப் பயன்படுத்திய ஓபிஎஸ் குடும்பமோ அதற்கான பணத்தையே இன்னும் கொடுக்கவில்லை என்கிறார்கள்.

அன்ன பிரகாஷ் - ஈஸ்வரி

மைத்ரேயன் கதை

தர்மயுத்த நேரத்தில் ஓபிஎஸ் பின்னால் நின்றவர்களில் முக்கியமானவர் மைத்ரேயன். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பணியாற்றி, செயற்குழு உறுப்பினர், ஒரு டஜன் பொதுச் செயலாளர்களில் ஒருவர், 10 துணைத் தலைவர்களில் ஒருவர் என்று வளர்ந்து, கடைசியில் பாஜகவின் மாநில தலைவராக உயர்ந்தவர் டாக்டர் மைத்ரேயன். வாஜ்பாய் ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்தபோது தமிழக பாஜக தலைவராக இருந்தது இவரே. பிறகு பாஜக திமுகவுடன் கூட்டணி வைத்து வாஜ்பாய் மீண்டும் பிரதமரானாதும், அது பிடிக்காமல் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். ஜெயலலிதா இருக்கும்வரையில் இவருக்குக் கட்சியில் மரியாதை இருந்தது. கடைசி காலத்தில் ராஜ்யசபா எம்பி-யாக இருந்தார்.

ஆனால், ஓபிஎஸ்சை நம்பி வந்த பிறகு மைத்ரேயனுக்கு தொடர்ந்து இறங்குமுகம்தான். 2019 மக்களவைத் தேர்தலில் அவருக்கு வாய்ப்புத் தரப்படவில்லை. ராஜ்யசபாவிலும் அவருக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. “நீ திரும்பவும் அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி” என்ற கதையாக, இவரை பாஜகவுக்கே போகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் நலம் விரும்பிகள்.

மனோஜ் பாண்டியன், கே.பி.முனுசாமி

தர்மயுத்த காலத்தில் ஓபிஎஸ்சின் தளபதிகளாக சுறுசுறுப்பாக இயங்கியவர்கள் 3 பேர். வடக்கே கே.பி.முனுசாமி. தெற்கே பி.எச்.பாண்டியனும், அவரது மகனும். ஓபிஎஸ்சை நம்பிவந்தவர்களில் முனுசாமியும் மனோஜும் மட்டுமே இன்று கட்சியில் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

பி.எச்.பாண்டியன்

மனோஜ் பாண்டியனுக்கு கடந்த மக்களவைத் தேர்தலின்போது, திருநெல்வேலியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்கள். இடையில், கட்சிக்கு வழிகாட்டுதல் குழு அமைத்தபோது அதிலும் இவருக்கொரு இடம் கிடைத்தது. திருநெல்வேலி எம்பி தேர்தலில் தோற்றுப்போனாலும், அடுத்த (2021) சட்டப் பேரவைத் தேர்தலில் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்கள். இத்தனைக்கும் மனோஜின் சொந்த ஊரும், பழைய தொகுதியுமான சேரன்மாதேவியும் அம்பாசமுத்திரம் தொகுதிக்குள்தான் வருகிறது. அங்கு ஏற்கெனவே இசக்கி சுப்பையா கட்சி வேலையும், தேர்தல் வேலையும் பார்க்கத் தொடங்கிவிட்டதால், வேறு வழியில்லாமல் ஆலங்குளத்தைக் கேட்டார் மனோஜ். அதையும் முகங்கோணாமல் கொடுத்தார்கள் ஓபிஎஸ்சும், ஈபிஎஸ்சும்.

மனோஜ் பண்டியன்

இதேதான் கே.பி.முனுசாமி கதையும். 2020 ஏப்ரலில் அவர் ராஜ்யசபா உறுப்பினராக்கப்பட்டார். கூடவே, கட்சியில் துணை ஒருங்கிணைப்பாளர் என்ற வலுவான பதவியும் தரப்பட்டது. 2021 சட்டமன்றத் தேர்தல் வந்தபோது, எம்எல்ஏ சீட் கேட்டார் முனுசாமி. எம்பி-யாக இருக்கும் இவருக்கு எதுக்கு எம்எல்ஏ சீட் என்றெல்லாம் கட்சிக்குள் கேள்விகள் எழுந்தாலும் முனுசாமிக்கு சீட் கொடுத்துவிட்டார்கள். இப்போது, எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வேப்பனபள்ளி எம்எல்ஏ-வாக மட்டும் தொடர்கிறார் முனுசாமி. இவர்கள் இருவருக்கும் கேட்டதெல்லாம் கிடைத்ததற்கு இன்னொரு காரணம், அவர்களது சாதிப் பின்னணியும், தொகுதியில் இருக்கிற சொந்தச் செல்வாக்கும்.

கூடவே, இவர்கள் ஓபிஎஸ்சை மட்டும் முழுமையாக நம்பவில்லை. எடப்பாடியிடமும் நெருங்கிப் பழகிவிட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் கே.பி.முனுசாமி ஓபிஎஸ் அணியில் இருந்து எடப்பாடி அணிக்கே தாவிவிட்டார். மனோஜ் பாண்டியன் அப்படி ஒரேயடியாகத் தாவிவிடவில்லை என்றாலும், அவர் ஓபிஎஸ்சுக்கு இணையாக எடப்பாடியையும் மதிக்கிறார். ஓபிஎஸ் ஒரு மதில் மேல் பூனை என்பது அவருக்குத் தெரியும்.

தர்மயுத்த காலத்தில், சசிகலா குடும்பத்தினர் ஜெயலலிதாவை அடித்துக் கீழே தள்ளியதாகவும், உயிருக்குப் போராடிய அவரை தாமதமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் கடுமையான குற்றச்சாட்டை சுமத்தியவர் மனோஜ் பாண்டியன். எந்த ஓபிஎஸ்சுக்காக அந்த குற்றச்சாட்டைச் சொன்னாரோ, அந்த ஓபிஎஸ்சே, “ சசிகலா வந்தால் வரவேற்போம்” என்று சொன்னதும் மிரண்டு போனார் மனோஜ். சசிகலா கட்சிக்குள் வந்தால் முதலில் நம்மைத்தான் காலி செய்வார் என்பதும் அவருக்குத் தெரியும். எனவே, எடப்பாடியுடனான உறவை பலப்படுத்திக் கொண்டார் மனோஜ் என்கிறார்கள்.

மாஃபா பாண்டியராஜன். பொன்னையன், செம்மலை

சி.பொன்னையன், செம்மலை

ஓபிஎஸ் பின்னால் வந்த நிர்வாகிகளில் மிக மூத்த நிர்வாகிகளான சி.பொன்னையன், செம்மலை போன்றோரும் உண்டு. பொன்னையன் அண்ணா காலத்து அரசியல்வாதி. எம்ஜிஆர் அமைச்சரவையிலும் அங்கம் வகித்தவர். ஜெயலலிதா அமைச்சரவையில் 2-ம் இடம் அதாவது நிதி அமைச்சராக இருந்தவர். பிறகு ஓரங்கட்டப்பட்டார். தர்மயுத்த நேரத்தில் ஓபிஎஸ் பக்கம் வந்தாலும், பிறகு இது மண் குதிரை என்பதைக் கண்டுபிடித்து ஈபிஎஸ் பக்கம் சரண்டராகிவிட்டார். எனவே, கட்சியில் கவுரவமான இடத்தில் இருக்கிறார்.

சமீபத்தில் நடந்த அதிமுக உட்கட்சித் தேர்தலில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரை மீண்டும் ஒருங்கிணைப்பாளர்களாக தேர்ந்தெடுத்த தேர்தல் அதிகாரியே இவர்தான். செம்மலையின் கதையும் அதுவே. ஓபிஎஸ் பக்கம் இருந்து ஈபிஎஸ் பக்கம் போனதால், இன்று கட்சியின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவராக இருக்கிறார். மேட்டூர் தொகுதியை மட்டும் பாமக அடம்பிடித்து வாங்கியிருக்காவிட்டால், இன்று இவரும் எம்எல்ஏ-வாக இருந்திருப்பார் என்கிறார்கள் அதிமுகவினர்.

ஓபிஎஸ் கதையை முழுமையாகப் பார்த்தால் ஒன்று மட்டும் புரிகிறது. அவரை நம்பியவர்கள் கெட்டுப்போகிறார்கள். அவரை விட்டு விலகிச் செல்பவர்கள் நினைத்தை எல்லாம் சாதித்துக் கொள்கிறார்கள்!

(நிறைவு)

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

ஓபிஎஸ்சை நம்பிவந்தவர்கள் என்ன ஆனார்கள்? - 6 ஓபிஎஸ்சை நம்பிவந்தவர்கள் என்ன ஆனார்கள்? - 6

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE