நடைபெற இருக்கும் குடியரசு தினவிழாவின் வாகன அணிவகுப்பில், தமிழக வாகனத்துக்கு அனுமதி மறுத்துள்ள மத்திய அரசின் செயலை கண்டித்து, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்துவருகிறார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
டெல்லியில் வரும் 26-ம் தேதி நடைபெறவிருக்கும் குடியரசு நாள் அணிவகுப்பில் வ.உ.சி, பாரதியார், வேலுநாச்சியார் மற்றும் மருது சகோதரர்கள் உருவங்கள் அடங்கிய தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. அதற்காகக் கூறப்பட்டுள்ள காரணம் ஏற்க முடியாதது!
இந்திய விடுதலையின் 75-வது ஆண்டு கொண்டாடப்படும் இந்தச் சிறப்பான தருணத்தில், விடுதலைக்காக போராடிய இவர்களின் உருவம் அடங்கிய அலங்கார ஊர்தி குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெறுவதே சிறப்பு. அவர்களை வெளிநாட்டு தலைவர்களுக்கு தெரியாது என்று கூறுவது தவறான வாதம்!
வ.உ.சியின் 150-வது ஆண்டு விழா இப்போது கொண்டாடப்படுகிறது. பாரதியார் உலகறிந்த கவிஞர். வேலுநாச்சியாரின் வீரத்தை அண்மையில் தான் பிரதமர் பாராட்டியிருந்தார். மருது சகோதரர்கள் வேலுநாச்சியாரின் போராட்டத்தை தொடர்ந்தவர்கள். இவற்றை விட வேறு என்ன தகுதி வேண்டும்?
குடியரசு நாள் அணிவகுப்பில் ஏற்க முடியாத காரணங்களைக் கூறி, தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு இடம் மறுக்கக் கூடாது. மத்திய அரசு அதன் முடிவை மாற்றிக்கொண்டு தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்!
இவாறு மருத்துவர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.
இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பியும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் தன் டிவிட்டர் பதிவில், “தமிழகத்தின் வீரமங்கை வேலுநாச்சியாரும், சுதேசித் தலைவன் வஉசியும், கேரளத்தின் நாராயண குருவையும் நிராகரிக்க நீங்கள் யார்?
குடியரசுதின விழாவில் இதையெல்லாம் விடுத்துவிட்டு வேறெதை அனுமதிப்பீர் ! கோட்சேக்களையும் - கோல்வார்க்கர்களையுமா?" என்று காட்டமாகக் கேட்டிருக்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியாவில் உள்ள மாநிலங்களின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் குடியரசு அணிவகுப்பில் ஊர்திகள் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தின் முக்கியமான சுதந்திரப் போராட்ட தலைவர்களான வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார், தேசியக்கவி பாரதியார் ஆகியோரின் படங்கள் இடம்பெறும் வகையில் தமிழக அரசு முடிவு செய்து ஒன்றிய அரசுக்கு அனுப்பியிருந்தது. இதுவரை 4 சுற்று ஒத்திகைகள் முடிவடைந்துள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் இடம்பெற்ற அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதியில்லை என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஒன்றிய பாஜக அரசின் இச்செயல் தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களையும், ஒட்டுமொத்த தமிழகத்தையும், தமிழக மக்களையும் அவமதிக்கும் செயலாகும். ஒன்றிய பாஜக அரசின் இந்நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் தென்மாநிலங்களில் பாஜக ஆளும் கர்நாடக அரசின் ஊர்தியை மட்டும் அனுமதித்துவிட்டு, இதர அனைத்து மாநில ஊர்திகளுக்கு அனுமதி மறுத்துள்ளது முறையற்றது. கண்டனத்துக்குரியது.
எனவே, ஒன்றிய பாஜக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படாமல் மாநில பெருமைகளை பறைசாற்றும் தமிழகத்தின் அலங்கார ஊர்திகள் உள்ளிட்டு அனைத்து மாநில ஊர்திகளும் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.‘ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.