பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன் மீதான அதிருப்தி அலை வலுத்து வருவதை அடுத்து, அவருக்கு பதிலாக தற்போதைய நிதியமைச்சரான ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக ஊகங்கள் றெக்கையடிக்கின்றன. இந்த ரிஷி சுனக் என்பவர், இன்ஃபோசிஸ் இணை நிறுவனரான நாராயணமூர்த்தியின் மருமகன் ஆவார்.
ஐரோப்பிய யூனியினிலிருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான பிரெக்சிட் ஆதரவின் மத்தியில் நாட்டின் பிரதமரானவர் போரிஸ் ஜான்சன். ஆனால், கரோனா அலையில் ஆட்டம் கண்டிருக்கும் நாடுகளின் தலைவர்கள் வரிசையில் போரிஸ் ஜான்சனும் சேர்ந்திருக்கிறார். டெல்டா வைரஸ் அலைக்கழித்த கடந்த அலையின் அனுபவங்களில் இருந்து பாடம் கற்காத போரிஸ் ஜான்சனின் நிர்வாகத்தால், நடப்பு அலையின் தாக்குதலில் இதுவரையில்லாத பாதிப்புக்கு இங்கிலாந்து தேசம் ஆளானது.
அது மட்டுமன்றி கரோனா கட்டுப்பாடுகளை நாட்டின் பிரதமரே மதிக்காத விவகாரம் வெடித்ததும், பொதுமுடக்கம் அமலில் இருந்த காலத்தில் பார்ட்டி கொண்டாடியதும் போரிஸ் ஜான்சன் மீதான அதிருப்திகளை அதிகரித்துள்ளன. மேலும் எரிபொருள் வாகன ஓட்டுநர் தட்டுப்பாடு விவகாரம், பெண்களுக்கு எதிரான போலீஸாரின் வன்கொடுமை நடவடிக்கைகள் உள்ளிட்டவையும் நாட்டு அதிபர் மீதான மக்களின் நம்பிக்கை குறையக் காரணமாகின. இவற்றில் எதிர்கட்சிகளின் எதிர்ப்பு மட்டுமன்றி ஆளும்கட்சியினரின் அதிருப்திகளும் அடங்கும்.
நாட்டின் நெருக்கடி சூழலை கையாளத் தெரியாதவர் என்ற குற்றச்சாட்டுடன், பிரதமர் பதவிக்கு அவப்பெயர் சேரும் வகையில் அலட்சியமாக இருந்ததான அதிருப்தியும் சேர்ந்துகொண்டதில் போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்ட பிறகும் அவருக்கு எதிரான விசாரணை தொடங்கி உள்ளது. அந்த விசாரண அறிக்கை வெளியானால், போரிஸ் மீதான அதிருப்தி மேலும் அதிகரிக்கும் என்றும் அனுமானிப்படுகிறது.
இதற்கிடையே போரிஸ் ஜான்சன் பதவி விலகினால் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கும் பிரிட்டன் விடை கண்டு வருகிறது. தற்போதைய நிதியமைச்சர் ரிஷி சுனக் இந்த ரேஸில் முன்னிலை வகிக்கிறார். நிதியமைச்சராக தனது பொறுப்பை திறம்பட நிர்வாகித்தவர் என்பதோடு, போரிஸ் ஜான்சனால் நியமிகப்பட்டவர் என்பதாலும் அரியணையை காலி செய்பவரின் ஆதரவையும் பெறுபவராகிறார். இந்த வகையில் ரிஷி சுனக், போரிஸ் ஜான்சனுக்கு பின்னர் பிரிட்டன் பிரதமராவதற்கான வாய்ப்புகள் பிரகாசம் பெற்றுள்ளன.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், ஹாம்ப்ஷயரில் பிறந்தவர். தற்போது 40 வயதாகும் ரிஷி, யார்க்ஷயர் ரிச்மோண்ட் எம்பியாக 2015 முதல் இருந்து வருகிறார். ஜூனியர் அமைச்சராக இருந்த இவர் தொடர்ந்து கருவூல தலைமைச் செயலராகவும் இருந்திருக்கிறார். கடந்தாண்டு, போரிஸ் ஜான்சனால் நாட்டின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டவர்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நாராயண மூர்த்தி - சுதா தம்பதியின் மகள் அக்ஷதாவை மணந்தவர். ரிஷி- அக்ஷதா தம்பதிக்கு கிருஷ்ணா, அனுஷ்கா என 2 குழந்தைகள் உள்ளனர்.