குமரியில் குழந்தைகளுக்கு வேகமாகப் பரவும் கரோனா தொற்று

By என்.சுவாமிநாதன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு கரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிவருகிறது. பெற்றோர்கள் மத்தியில் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இன்னும்கூட இல்லை என சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை மிகவும் வேகமாகப் பரவிவருகிறது. பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுவிட்டதால், மருத்துவமனையில் சேர்க்கும் அவசியமும், இறப்பு விகிதமும் கணிசமாகக் குறைந்துள்ளது என்பது இதில் ஆறுதல் அளிக்கும் விஷயம். அதேநேரம் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக்கொண்டே வருகிறது. அதிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு அதிக அளவில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுவருகிறது. அந்தவகையில் நேற்று மாலை முதல் இன்று மாலைவரை மட்டுமே, 47 குழந்தைகள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் 18 வயதுக்குக்கீழ் உள்ள 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சுந்தரபாண்டி கூறும்போது, ‘'குழந்தைகளுக்கு தொடர்ந்து தொற்று ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. பள்ளிக்கூடங்களுக்கு அரசு இம்மாத இறுதிவரை விடுமுறை விட்டுள்ளது. அதற்குக் காரணம், இதுவரை தடுப்பூசி செலுத்தாத 15 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் தொற்றால் பாதிக்கப்படக்கூடாது என்னும் நல்லெண்ண அடிப்படையில்தான்!

ஆனால் மக்களோ தங்கள் குழந்தைகளின் விடுமுறை தினமாகவே இதை நினைக்கும் மனப்பாங்கு இருக்கிறது. குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில் அதிகமான குழந்தைகளைப் பார்க்கமுடிகிறது. அதேபோல் திருமண வீடு உள்ளிட்ட விசேஷங்களுக்கு தங்கள் வீட்டுக் குழந்தைகளையும் தவறாமல் அழைத்து வந்து விடுகின்றனர். பெற்றோர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால்தான், குமரியில் குழந்தைகள் மத்தியில் தொடர்ந்து கரோனா வைரஸ் தொற்று உயர்ந்துவருகிறது” என்றார் அவர்.

பெற்றோர்களுக்கும் வரட்டும் இனி பொறுப்புணர்வு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE