நாமக்கல் அருகே மாடு பூ தாண்டும் விநோதப் போட்டி

By கி.பார்த்திபன்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, ஏறுதழுவதல் போன்ற பெயர்களில் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஊனங்கல்பட்டி எனும் கிராமத்தில் மாடு பூ தாண்டுதல் எனும் வித்தியாசமான போட்டி நடத்தப்படுவது வழக்கம். இதற்காக காளைகள் பிரத்யேகமாக வளர்க்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகை தினத்தன்று, கிராமத்தில் உள்ள வீரகாரன் கோயில் வளாகத்தில், மாடு பூ தாண்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. குறிப்பிட்ட தூர இடைவெளியில் பூக்களைக் கொண்டு எல்லைக்கோடு வரையப்பட்டிருக்கும். அதை முதலில் தாண்டும் காளைக்குப் பரிசு வழங்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று ஊனங்கல்பட்டி கிராமத்தில் மாடு பூ தாண்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊனங்கல்பட்டி, வளையக்காரன்பட்டி, குன்னத்தூர், மல்லுமாச்சம்பட்டி, சின்னபெத்தாம்பட்டி ஆகிய 5 கிராமங்களைச் சேர்ந்த 5 காளைகள் போட்டியில் பங்கேற்றன. 3 முறை நடத்தப்பட்ட போட்டியில், சின்னபெத்தாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காளை 3 முறை எல்லைக்கோட்டை தாண்டி வெற்றி பெற்றது. இக்காளைக்கு விழாக்குழுவினர் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

இதுகுறித்து ஊனங்கல்பட்டியைச் சேர்ந்த விழாக்குழுவினர் கூறும்போது, “மாடு பூ தாண்டுதல் போட்டியில் கிராமத்துக்கு ஒரு காளை வீதம் 5 கிராமங்களுக்கு உட்பட்ட கோயில் காளைகள் பங்கேற்கும். இதன்படி இந்த ஆண்டு 5 காளைகள் பங்கேற்றன. இந்தக் காளைகள் குறிப்பிட்ட தூரத்தில் பூக்களால் வரையப்பட்ட எல்லைக் கோட்டை 3 முறை தாண்ட வேண்டும். அவ்வாறு தாண்டும் காளையே வெற்றிபெற்ற காளையாக கருத்தப்படும். அந்தக் காளைக்கு பரிசு வழங்கப்படும். இதை வெற்றி பெற்ற காளையின் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பெருமையாக கருதுகின்றனர்.

தவிர அக்காளையை கிராமத்துக்கு அழைத்து வரும்போது சுவாமி மாடு என்பதால், பூஜை செய்து வழிபாடு நடத்துவர். காலங்காலமாக இந்தப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. போட்டியில் மாடுகளை எந்த விதத்திலும் துன்புறுத்துவதில்லை. ஓட்டப் போட்டி போன்றுதான் இப்போட்டி நடத்தப்படுகிறது. தொட்டிய நாயக்கர் பிரிவினர் மட்டும் போட்டியில் பங்கேற்பர். கோயில் மாடு என்பதால், மூக்கணாங் கயிறு போடப்படாது. போட்டியில் வெற்றிபெறும் காளையை சம்பந்தப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பில் ஒப்படைக்கப்படும். அக்காளையை அடுத்த பொங்கல் பண்டிகை வரும்வரை அந்நபர் பராமரிப்பு செய்ய வேண்டும்.

இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் சின்னபெத்தாம்பட்டியைச் சேர்ந்த காளை 3 முறை எல்லைக் கோட்டை தாண்டியதால், அக்காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. விழா நடைபெறும் இடத்தில் கோமாளி போல் சிலர் வேடமிட்டு கூட்டத்தைக் கட்டுப்படுத்துவர். அவர் விழா நடைபெறுவதற்கு ஒரு மாதம் முதல் விரதம் கடைபிடிப்பது வழக்கம். இந்த ஆண்டு கரோனா காரணமாக விழா எளிமையாக நடத்தி முடிக்கப்பட்டது” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE