அந்தப் பேச்சுப் பேசுனா... சும்மா விடுவாங்களா?

By கே.எஸ்.கிருத்திக்

அதிமுக ஆட்சியில் மற்ற அமைச்சர்களை விடவா சம்பாதித்து சொத்துச் சேர்த்துவிட்டார் ராஜேந்திர பாலாஜி? வேலை வாங்கித்தருவதாக இவரைப் போலவே பலபேரிடம் பணம் வாங்கிய செந்தில் பாலாஜி இன்றைக்கும் அமைச்சராக இருக்கிறபோது, கே.டி.ஆரை மட்டும் இந்தத் துரத்து துரத்துகிறது போலீஸ்?

ஆட்சியில் இருந்தபோது அகங்காரமாய் பேசிவிட்டு ஆட்சி போனதும், “நான் முன்ன மாதிரி இல்ல... இப்ப ரொம்ப பக்குவப்பட்டுட்டேன்... முன்னாடி ஏதாவது தப்பாப் பேசியிருந்தா உங்க வீட்டுப் பிள்ளையா நினைச்சி மன்னிச்சுக்கோங்க” என்று அறிக்கை வெளியிட்டவர் ராஜேந்திர பாலாஜி. இவரது பேச்சு வெறுமனே அரசியல்ரீதியானது என்றால்கூட மறந்திருப்பார்கள். ஆனால், தனிப்பட்ட முறையிலான தரக்குறைவான தாக்குதல்கள் தான் கே.டி.ஆரை சிறை வரைக்கும் சிந்திக்க வைத்துவிட்டது.

ஸ்டாலின் புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறிய போது, “அந்தத் தலையா... இந்த வாயா” என்றெல்லாம் பேசிய பாலாஜி, “நீ ஆஸ்திரேலியாவுக்கு எதுக்குப் போன... மண்டையில முடி நடுறதுக்குத்தான... என்கூட குற்றாலத்துக்குக் குளிக்க வர்றீயா?" என்றெல்லாம் எல்லை கடந்தார்.

இதையெல்லாம் உள்வாங்கியிருந்த ஸ்டாலின் தனது விருதுநகர் பிரச்சாரத்தில், “இந்த ஊர்ல ஒரு அமைச்சர் இருக்காரு. ரவுடி மாதிரி பேசுறாரு. அவர் பேசுற ஒவ்வொரு வார்த்தைக்கும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்” என்று பொடிவைத்துவிட்டுப் போனார். அப்போதும் அடங்காத கே.டி.ஆர், “நீ என்ன போலீஸ் கமிஷனரா, ஐகோர்ட் ஜட்ஜா... என் ஊருக்கு வந்து என்னையே மிரட்டுறீயா? நீ ஆம்பளையா இருந்தா ஒத்தைக்கு ஒத்த வா பாப்போம்” என்று கோதாவுக்கு அழைத்தார். இதை ஸ்டாலினே மறந்தாலும் அவரது குடும்பத்தினர் மறக்கவும் இல்லை; மன்னிக்கவும் இல்லை. விளைவு... விடாது துரத்தும் வழக்குகளால் கே.டி.ஆரால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

அரசியல்வாதிகளுக்குப் பலமே தொண்டர்கள்தான். தொண்டன் எனும் அரண் இல்லாவிட்டால் எந்தத் தலைவனுக்கும் கை கால் உதறத்தான் செய்யும். கே.டி.ஆருக்கு தொண்டர்கள் பலம் அறவே கிடையாது என்பதால், இப்போது உதறல் எடுக்கிறது. தனக்கு ஒன்று என்றால் துடித்துக் கிளம்பும் விசுவாசிகளை அவர் சம்பாதித்து வைக்கவில்லை. இவரால் பலனடைந்தவர்களில் பலர், கட்சிக்கே சம்பந்தமில்லாதவர்கள். பழுத்த மரத்துப் பறவைகள். அவர்களை நகரச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், மாவட்டப் பொறுப்பாளர் என்று போட்டது கே.டி.ஆர் செய்த பெரிய முட்டாள்தனம். அதன் பலனை இப்போது அவர் அனுபவிக்கிறார் என்கிறார்கள் உள்ளூர் ர.ர.கள்.

செல்லூர் ராஜூ, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் போன்றவர்களும் மீடியா பிரியர்கள்தான் என்றாலும், என்ன பேச வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிப்பவர்கள். பக்கத்தில் இருப்பவர்கள் தூண்டிவிட்டு, அதற்கு இவர் சொன்ன பதிலுக்கு அவர்கள் கைதட்டி சிரித்துவிட்டால், அதை அப்படியே போய் மீடியா முன்பும் சொல்பவர்கள் இல்லை. “மோடி எங்கள் டாடி” என்று கே.டி.ஆர் சர்வசாதாரணமாய் சொல்லிவிட்டுப்போய்விட்டார். ஆனால், அந்தப் பேச்சு மாநிலம் முழுக்க அதிமுகவுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களுக்கும் கே.டி.ஆர் மீது மரியாதை இல்லாமல் போனது.

தங்களின் அமைச்சரவை சகா, மாவட்டச் செயலாளர் இப்படி துரத்தப்படுவதைக் கண்டித்து சட்டப்பேரவையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே பேசாததற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள். கடைசியில், கே.டி.ஆருக்கு அடைக்கலம் கொடுத்தது முன்னாள் கர்நாடக காவல் அதிகாரியும், தமிழக பாஜக தலைவருமான கே.அண்ணாமலைதான் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

விஜய நல்லதம்பி

சொந்தக்காசில் சூனியம்

முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் உடன்பிறந்த தம்பி விஜய நல்லதம்பியின் பிரதான தொழிலே, வேலை வாங்கித்தருவதாகச் சொல்லிப் பணம் வாங்கிக்கொடுப்பதுதான். 2006 வரையில் அதிமுக, 2011 வரையில் திமுக, பிறகு மீண்டும் அதிமுக என்று ஆட்சியில் இருக்கிற கட்சிக்கு ஜம்ப் ஆகும் இவர், கே.டி.ஆருடன் நெருக்கமானார். மதுரையில் வசித்த 56 வயதுக்காரரான நல்லதம்பியை, விருதுநகர் மாவட்ட மாணவரணி செயலாளராக்கினார் கே.டி.ஆர். பிறகு, அவரது மனைவியை ஒன்றிய கவுன்சிலராக்கினார். கடைசியில், நல்லதம்பியை வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளராகவும் ஆக்கிவிட்டார். தன் பெயரை ரிப்பேர் ஆக்குகிறார் என்றதும் அவரை ஒன்றிய செயலாளர் பொறுப்பிலிருந்து கழற்றிவிட்டார் கே.டி.ஆர்.

இந்நிலையில், “வேலைவாங்கித் தருவதாக பத்து பேர்கிட்ட வாங்கிய 3.30 கோடியையும் கே.டி.ஆர்.கிட்ட கொடுத்திட்டேன். அவர்தான் வேலைவாங்கித்தராம மோசடி பண்ணிட்டாரு” என்று விஜய நல்லதம்பி போலீஸில் கொடுத்த வாக்குமூலம்தான் இப்போது கே.டி.ஆரை சிறைப் பயணம் போகவைத்திருக்கிறது.

ராஜேந்திர பாலாஜியுடன் ராஜவர்மன்

கே.டி.ஆர் பதவிக்கு துண்டுபோடும் ராஜவர்மன்

கே.டி.ஆர் தலைமறைவானதும், ஆதவாளர்களைப் பிடித்து விசாரித்தது போலீஸ். அதில் முக்கியமானவர் முன்னாள் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன். போலீஸ் விசாரணைக்கு போய்விட்டு வந்து அவர் கொடுத்த பேட்டியில், “அண்ணனை ஒண்ணும் செய்ய முடியாது, அவர் வரவேண்டிய நேரத்துல கரெக்ட்ரா வருவார்” என்று திரியைக் கொளுத்திப்போட்டார்.

விஜய நல்லதம்பியை போலீஸார் ஒரு புரோக்கராகத்தான் பார்க்கிறார்கள். அப்படியிருக்க அவரது புகார் வலுவானதற்குக் காரணம், கே.டி.ஆர் தலைமறைவானதுதான். அப்படி அவரை தலைமறைவாகச் சொன்னதே, ராஜவர்மன்தானாம். அதிமுக ஆட்சியில் இருந்தபோது, உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த விவகாரத்தில் கே.டி.ஆர் தரப்புக்கு முக்கியப் பங்குண்டு. கே.டி.ஆர் தரப்பை இந்த விவகாரத்தில் இழுத்துவிட்டதே ராஜவர்மன் தரப்புதான் என்கிறார்கள். எனினும், அப்போது கே.டி.ஆர் அமைச்சராக இருந்ததால் ராஜவர்மன் நினைத்தது நடக்கவில்லை. இப்படி ராஜேந்திர பாலாஜி கூட வைத்திருந்த அத்தனை பேருமே, அவருக்கு கேடு செய்பவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

விநாயகமூர்த்தி

“கே.டி.ஆர் பேச்சுதான் கூடக் குறையப் பேசுவார். ஆனா, அத்தனை ஒன்றும் முரடன் இல்லை. ரொம்பவே பயந்த சுபாவம் கொண்டவர். ‘அண்ணே இதைச் செய்யாதீங்க, மேடம் காதுக்குப் போச்சுன்னா கஷ்டம்’ என்று சொன்னால், ‘சரிங்க தலைவரே’ என்று உடனே பின்வாங்கிவிடுவார். அம்மா மறைவுக்குப் பின்னால் அந்தப் பயம் அத்துப்போய்விட்டது. அவரது ஆணவப் பேச்சு பிடிக்காமல் என்னைப் போன்றவர்களும் விலகிவிட்டோம்” என்கிறார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளர் ஒருவர்.

இந்த நிலையில், கே.டி.ஆர் கைதைக் கண்டித்து விநாயகமூர்த்தி என்ற திமுக புள்ளி கட்சியை விட்டே விலகி இருக்கிறார். “கே.டி.ஆர். மீது சொத்துக் குவிப்பு வழக்கு இருக்கு. அதில் அரெஸ்ட் பண்ணியிருந்தாக்கூட பரவாயில்லை. ஆனா, பண மோசடிங்கிற பொய்யான வழக்குல அவரைத் துரத்துனது அநியாயம். வேலை முடியலைன்னா வாங்கிய பணத்தைத் திருப்பிக் குடுக்கிறது அவரோட பாலிசி.

விருதுநகர் மாவட்டத்துல மற்ற அரசியல்வாதிங்க பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் நன்கொடை என்கிற பெயரில் கோடி கோடியா உருவிடுவாங்க. ஆனா கே.டி.ஆர் அப்படிக் கிடையாது. ‘முதலாளி’ என்ற வார்த்தைக்கு மறுவார்த்தை பேசமாட்டார். அவரைப் போய் பண மோசடி வழக்குல கைது பண்ணது சரியில்லை. அதனால்தான் திமுகவில் இருந்து விலகிட்டேன்” என்கிறார் விநாயகமூர்த்தி.

இந்த வழக்கில் ஒருவேளை கே.டி.ஆர் வெளியில் வந்துவிட்டால் அவரை அடுத்த வழக்கில் சிக்கவைக்க, நிறைய புகார்களை வாங்கி வைத்திருக்கிறார்கள். பத்திரிகையாளர் தாக்கப்பட்ட வழக்கையும் மறு விசாரணைக்கு எடுக்கலாம் என்கிறார்கள்.

ஆக, ராஜேந்திர பாலாஜி இப்போதைக்கு நிம்மதியாய் தூங்கமுடியாது போலிருக்கிறது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE