மாஸ்க் போடு; காவலரைத் தாக்கிய மாநகராட்சி உதவிப் பொறியாளர்

By ரஜினி

பொதுமக்களை முகக்கவசம் அணியுமாறு கூறும் மாநகராட்சி அதிகாரியை முகக்கவசம் அணியச் சொன்ன, காவலரைத் தாக்கி செல்போனை உடைத்த அவலம் அரங்கேறியுள்ளது.

தமிழகம் முழுதும் ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவிவருவதன் காரணமாக நேற்று(ஜன.16) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. சென்னையில் அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே சுற்றுவோரை கண்காணித்து, ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் அமைத்து போலீஸார் வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் முகக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்களிடம் அபராதம் வசூல் செய்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை எம்ஜிஆர் நகர் போலீஸார் காசி தியேட்டர் அருகே, எஸ்டேட் 2-வது தெருவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் வந்த இருவரை, தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் ஒருவர் மாநகராட்சி அலுவலகத்தில் சுகாதாரத் துறை உதவிப் பொறியாளராக பணிபுரிந்துவரும் வாழவந்தான் என்பதும், இவர் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து காவலர் சிவகிருஷ்ணன், குடிபோதையில் இருந்த சுகாதாரத் துறை பொறியாளரிடம் முகக்கவசம் அணியுமாறு கூறியுள்ளார். அதற்கு அவர், என்னையே முகக்கவசம் அணிய சொல்கிறாயா? என்று கேட்டு காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதைக் காவலர் சிவகிருஷ்ணன் தனது செல்போனில் வீடியோ எடுத்ததால், ஆத்திரமடைந்த வாழவந்தான், காவலரைத் தாக்கி அவரது கையில் இருந்த செல்போனைப் பிடுங்கி கீழேபோட்டு உடைத்துள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட காவலர் சிவகிருஷ்ணன், உடனே இதுகுறித்து அசோக் நகர் உதவி ஆணையர் அசோக்கிடம் புகார் அளித்துள்ளார். உதவி ஆணையரோ புகாரை வாங்காமல் இருவரிடமும் சமரசம் பேசி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, உயர் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களை கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என பிரச்சாரம் செய்யும் மாநகராட்சி அதிகாரியே, முகக்கவசம் அணியாமல் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE