உபி தேர்தல்; முஸ்லிம்களைத் தவிர்க்கும் பாஜக

By ஆர். ஷபிமுன்னா

இரண்டாவது முறையாக முஸ்லிம்கள் இல்லாமல் உத்தர பிரதேசத் தேர்தலை சந்திக்கிறது பாஜக. இக்கட்சி முதல்கட்டமாக வெளியிட்ட 107 வேட்பாளர்களில் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை.

உபியில் சுமார் 22 சதவிகிதம் முஸ்லிம்கள் உள்ளனர். இதனால், ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் முஸ்லிம் வாக்குகளை அதிகமாகக் குறிவைப்பது வழக்கம். ஆனால், பாஜக மட்டும் 2014 மக்களவை தேர்தல் முதல் உபியில் முஸ்லிம்களை பொருட்படுத்துவதில்லை. இதன் 2017 சட்டப்பேரவை மற்றும் 2019 மக்களவை ஆகிய தேர்தலிலும் ஒரு முஸ்லிமுக்கும் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. இதன் காரணமாக உபி பாஜகவில் ஒரு முஸ்லிம் கூட எம்எல்ஏவாகவும், எம்.பியாக இல்லை.

இங்குள்ள முஸ்லிம்களின் இருபிரிவுகளான சியா மற்றும் சன்னிகளின் வஃக்பு வாரியம் மற்றும் அரசு மதரஸாக்கள் உள்ளன. இதனால், ஒரு கட்டாயத்தின் பேரில், ஷியா பிரிவு முஸ்லிமான மோஷின் ராசா என்பவர் அமைச்சராக்கப்பட்டார். இவரும் உபி மேல்சபைக்கு தேர்வாகி இருந்தார். இதேபோல் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையிலும் ஒரே ஒரு முஸ்லிமாக மத்திய சிறுபான்மைநலத் துறை அமைச்சராக முக்தர் அப்பாஸ் நக்வி இடம்பெற்றுள்ளார். ஷியா பிரிவு முஸ்லிமான இவரும் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர்.

இந்நிலையில் 2022 சட்டப்பேரவை தேர்தலில் மாற்றம் இல்லாத சூழல் உருவாகி உள்ளது. இன்று பாஜக வெளியிட்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் ஒரு முஸ்லிமின் பெயரும் இடம் பெறவில்லை.

அகிலேஷ்சிங், முலாயம்சிங்

பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சி

இங்கு மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பிப்ரவரி 14 முதல் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், முதல்கட்டத் தேர்தல் உபியின் மேற்குப்பகுதி தொகுதிகளில் நடைபெறுகின்றது. இங்கு பெரும்பாலானத் தொகுதிகள் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்பவை. இதில், பல தொகுதிகள் வேட்பாளரின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவர்கள் முஸ்லிம்களாக உள்ளனர்.

இச்சூழலில் பாஜக பெயரளவுக்கு ஒருசில தொகுதிகளில் முஸ்லிம்களை போட்டியிட வைத்திருந்த நிலைமை மாறி, தற்போது ஒரு முஸ்லிமைக்கூட பாஜக வேட்பாளராக்குவது கிடையாது. இதன் பின்னணியில் பாஜக கையாளும் பிரித்தாளும் சூழ்ச்சியே காரணமாக உள்ளதாகக் கருதப்படுகிறது.

2014 முதல் புறக்கணிக்கப்படும் முஸ்லீம்கள்

இங்கு பாஜகவின் எதிர்கட்சிகள் அனைத்தும், முஸ்லிம்களின் தொகுதிகளில் பெரும்பாலும் அம்மதத்தைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக்குவது வழக்கம். இவர்களால் முஸ்லீம்களின் வாக்குகள் பிரிந்து பாஜகவுக்காகப் போட்டியிடும் முஸ்லிம் அல்லாத வேட்பாளர் வெற்றிபெற்று விடுகிறார். இந்த சூட்சுமத்தை மறைமுகமாக பாஜக உபியில் அரங்கேறி வந்தது.

கடந்த 2014 மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நரேந்தர மோடி முன்னிறுத்தப்பட்டது முதல். இதை வெளிப்படையாகவே செய்து வருகிறது பாஜக. இதன் தாக்கம்தான் பாஜகவின் வேட்பாளர்களில் முஸ்லிம்கள் இடம்பெறுவதில்லை. எனவே, அடுத்தடுத்து வரவிருக்கும் வேட்பாளர் பட்டியலில் பாஜக ஒரு முஸ்லீமையும் சேர்க்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக கூட்டத்தில் அமித் ஷா

மாயாவதியின் கட்சியில் 13 முஸ்லிம்கள்

இக்கருத்தை ஆமோதிக்கும் வகையில், உபியின் முன்னாள் முதல்வரான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் பட்டியலும் இன்று வெளியாகி உள்ளது. இதில் இடம்பெற்ற 53 வேட்பாளர்களில் 13பேர் முஸ்லிம்கள். அலிகர், மீரட் உள்ளிட்ட முக்கிய முஸ்லிம் தொகுதிகளில் இவர்கள் போட்டியிடுகின்றனர். கடந்தமுறை 2017 சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து கட்சிகளைவிட, அதிகமாக 106 முஸ்லிம்கள் மாயாவதியின் கட்சியில் போட்டியிட்டனர். இது உபியின் மொத்தமுள்ள தொகுதிகளில் நான்கில் ஒரு பங்கு ஆகும்.

முஸ்லீம்களுக்கு வாய்ப்பளித்த அகிலேஷ்

உபியின் முக்கிய எதிர்கட்சியாக வளர்ந்திருப்பது முலாயம்சிங்கின் சமாஜ்வாதி கட்சி. இதற்கு 2017 முதல் அவரது மகன் அகிலேஷ்சிங் யாதவ் தலைவராகி, உபியின் முதல்வருமானார். இவரும் தன் தந்தையைப் போல் முஸ்லிம்களை முன்னிறுத்தியே அரசியல் செய்து வருகிறார். இதனால், சமாஜ்வாதியின் ‘எம்.ஒய்’ எனும் வாக்கு வங்கியில் முஸ்லிம்களும், யாதவர்களும் இடம்பெற்றுள்ளனர். அகிலேஷ் முதல்கட்டமாக வெளியிட்ட தனது கட்சியின் 29 வேட்பாளர் பட்டியலில் ஒன்பது முஸ்லிம்கள் இடம்பெற்றுள்ளனர்.

முஸ்லிம்களை ஆதரிக்கும் சிறிய கட்சிகள்

உபியின் சிறிய கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியலில்கூட முஸ்லிம்கள் தவறாமல் இடம்பெறுகின்றனர். அகிலேஷுடன் இந்தமுறையும் கூட்டணி சேர்ந்துள்ள மறைந்த அஜீத்சிங்கின் ராஷ்டிரிய லோக் தளமும் சில முஸ்லிம்களை வேட்பாளராக்கி உள்ளது. தனித்துப் போட்டியிடும் வேறு சில கட்சிகளும் முஸ்லிம்களை வேட்பாளர்களாக்கி வருகின்றனர். தேசியக் கட்சியானாலும், உபியில் சிறிய கட்சிகளுள் ஒன்று என்ற நிலைக்கு தள்ளப்பட்ட காங்கிரஸும் தேர்தலில் முஸ்லிம்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. 125 வேட்பாளர்களுடன் வெளியான காங்கிரஸின் பட்டியலிலும் 20 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

மதசார்பற்ற ஜனநாயகம்?

சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜின் அடுத்துவரும் வேட்பாளர்கள் பட்டியலிலும் மேலும் பல முஸ்லிம்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். 2014 முதல் பிரதமராக பதவி வகிக்கும் மோடி தாரக மந்திரமாகக் கூறுவது “சப் கே சாத்! சப் கா விகாஸ்!(எல்லா பிரிவினருடன் அனைவருக்கும் வளர்ச்சி)” என்பது. ஆனால், அவரது கட்சியான பாஜக, முஸ்லிம்கள் அதிகமுள்ள மாநிலத்திலேயே ஒரு முஸ்லிமுக்குகூட வாய்ப்பளிக்காமல் தொடர்வது, மதசார்பற்ற ஜனநாயகத்துக்கு வழிவகுக்குமா எனும் கேள்வியை எழுப்பத்தானே செய்யும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE