தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா பரவல்; வண்டலூர் உயிரியல் பூங்கா மூடல்

By காமதேனு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23,989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியர்களுக்கு தொற்று பரவியதை அடுத்து பூங்கா மூடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு எப்படி உள்ளது என்ற விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்று தினசரி பாதிப்பு 23,459 ஆக பதிவாகி இருந்த நிலையில், இன்றைய தொற்று பாதிப்பு 23,989 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரேநாளில் 8,978 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,31,007 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று கரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 70 ஊழியர்களுக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, ஜன.31 வரை பூங்கா மூடப்படுவதாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளைப் பாதுகாக்கும் பொருட்டு பூங்கா மூடப்படுவதாக வண்டலூர் உயிரியல் பூங்காவின் இயக்குநர் கர்ண பிரியா தெரிவித்துள்ளார். தொற்று கண்டறியப்பட்ட 70 பேரும் குறைந்த பாதிப்புடன் இருப்பதாகவும், பலர் விலங்குகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால் அவர்கள் மூலம் விலங்குகளுக்கு தொற்று ஏற்படாமல் பாதுகாக்க, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதிய தலைமுறைக்கு கர்ண பிரியா தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து வண்டலூர் உயிரியல் பூங்கா, தொற்று பரவல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE