முதுமலை முகாமில் யானைப் பொங்கல்!

By ஆர்.டி.சிவசங்கர்

முதுமலை யானை முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு பழங்கள், கரும்பு மற்றும் சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டு யானைப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம் சுற்றுலாவுக்கு புகழ்பெற்றதால் கொண்டாட்டங்களுக்கு இங்கு குறைவு இல்லை. ஆனால், பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலங்கள் சற்றே குறைவுதான். இதற்கு முக்கிய காரணமாக இங்கு உழவும், வயலும் இல்லாதாதுதான்.

பணப்பயிரான தேயிலை, மலைக் காய்கறிகள் மட்டுமே இங்கு விளைவிக்கப்படுவதால், நெல் குறித்தும் வயல் குறித்தும் இம்மாவட்ட மக்களுக்குப் பெரிதாக தெரிவதில்லை. சமவெளிப்பகுதி காலநிலையை கொண்ட கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் சிலர் மட்டுமே நெல் பயிரிடுகின்றனர். அவர்களும் கேரள மாநில எல்லையை ஒட்டியவர்கள்.

எனவே, பொங்கல் பண்டிகை இங்கு பெரும்பாலும் விடுமுறையாகவே மக்கள் களிக்கின்றனர். சம்பிரதாயத்துக்காக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பிலிருந்து, குக்கரில் பொங்கலிட்டு பூஜையுடன் பண்டிகை முடித்து விடுகின்றனர்.

பொங்கல் பண்டிகை காலம் தொடர் விடுமுறை என்பதால், இந்தப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும். சுற்றுலாப் பயணிகளை கவர, அரசு சார்பில் சுற்றுலார் பொங்கல் கொண்டாடப்படும். மாட்டுப் பொங்கலுக்கு வழியில்லாத நிலையில், வனத் துறை வளர்ப்பு யானைகளுக்கு பூஜை செய்து ‘யானைப் பொங்கல்’ கொண்டாடுவது இங்கு சிறப்பு.

மாட்டுப் பொங்கலான இன்று முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில், வளர்ப்பு யானைகள் பங்கேற்ற யானைப் பொங்கல் விழா சிறப்பாக நடந்தது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு, அபாயரணயம் யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரித்து வருகின்றனர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு அடுத்தநாள், இம்முகாம்களில் பொங்கல் விழா சிறப்பாக நடந்து வருகிறது. நடப்பு ஆண்டுக்கான பொங்கல் விழா இன்று மாலை யானைகள் முகாமில் நடந்தது. முன்னதாக வளர்ப்பு யானைகள் மாயார் ஆற்றில் குளிக்க வைத்து, அலங்கரித்து வரிசையில் நிறுத்தப்பட்டன.

வழக்கமாக யானைகள் முகாமில் உள்ள விநாயகர் கோயிலில், சிறிய யானைகள் மணியடித்து கோவிலை சுற்றி வந்து பூஜை செய்து மண்டியிட்டு வணங்குவது வழக்கம். இந்த நிகழ்ச்சி இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும்.

ஆனால் இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக ,யானைகள் பூஜை எதுவும் நடைபெறாதது இங்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்தது. கோயிலில் வனத் துறையினர் பூஜை செய்து பின்னர் யானைகளுக்கு தீபாராதனை காட்டி உணவுகளை வழங்கினர்.

யானைகளுக்குப் பொங்கல், கரும்பு மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான யானைகள் வரிசையில் நிற்க வைக்கப்பட்டு உணவு வழங்கும் நிகழ்ச்சியைக் காண்பது தங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்ததாகவும், யானைப் பொங்கல் நிகழ்ச்சி தங்களுக்கு மகிழ்ச்சியை அளித்ததாகவும் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE