மூன்றாண்டுகளாக முதலிடம்; மதுரை பிரபாகரன் ஹாட்ரிக்!

By காமதேனு

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 21 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்ற மாடுபிடி வீரர் பிரபாகரன், தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை ருசித்துள்ளார். 2020, 2021-ல் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் பிரபாகரன்தான் முதல் பரிசை வென்றார்.

மதுரை பாலமேட்டில், இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். தொடக்கத்தில் இருந்தே ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்தது. சீறிப் பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய காளையர்களுக்கும், காளையர்களுக்கு போக்குக் காட்டிய காளைகளுக்கும் கட்டில், பீரோ, தங்கக் காசு உள்ளிட்ட பலவகையான பொருட்கள் வழங்கப்பட்டன. போட்டியில் முறைகேடாக விளையாடிய 2 பேரை போட்டியில் இருந்து வெளியேற்றி வருவாய்த் துறை அதிகாரிகள், அவர்களை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்தப் போட்டியில் 2 காவலர்கள் உட்பட 36 பேர் காயம் அடைந்தனர். மாலை 5 மணிக்கு போட்டி நிறைவடைந்தது. 21 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த, பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரனுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. இவர் கடந்த 2020, 2021 ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதலிடம் பிடித்தார். தற்போதும் முதலிடம் பிடித்து ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஜல்லிக்கட்டில் வென்ற மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். 11 காளைகளை அடக்கி 2-வது இடத்தைப் பிடித்த கார்த்திக்ராஜாவுக்கு டிவி பரிசாக வழங்கப்பட்டது.

சிறந்த காளைக்கான முதல் பரிசாக சிவகங்கை மாவட்டம், சிவபுலியைச் சேர்ந்த சூளிவலி மாட்டின் உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 2-வது பரிசு, நாட்டு மாடு காளையின் உரிமையாளர் பிரகாஷ் என்பவருக்கு வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE