விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் விசாரணை அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த 5-ம் தேதி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, திருச்சி சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார். அப்போது, அதிமுக நிர்வாகிகளை அவர் சந்திக்க மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் விசாரணை அதிகாரியிடம் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, திருச்சி சிறையில் இருந்து வெளியே வந்த ராஜேந்திர பாலாஜியை வரவேற்க அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் வந்தனர். ஆனால், யாரையும் சந்திக்காமல் உடனடியாகக் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றுவிட்டார். இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு ஒத்துழைப்பு தருவதாக ராஜேந்திர பாலாஜி தரப்பில் விசாரணை அதிகாரியிடம் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.