இங்கிலாந்தில் தமிழக அரசு சார்பில் பென்னிகுவிக் சிலை!

By காமதேனு டீம்

“முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்குக்கு இங்கிலாந்தில் சிலை நிறுவப்படும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாகத் திகழ்வது முல்லைப்பெரியாறு அணை. தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள இந்த அணை ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில், இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக் தனது பெரும் முயற்சியால் கட்டினார்.

பென்னிகுவிக் பிறந்தநாளான இன்று (ஜன.15), தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ‘பென்னிகுவிக்’ பொங்கல் என்ற பெயரில் பொங்கல் வைத்து மக்கள் வழிபடுகின்றனர். மேலும், பென்னிகுவிக் பிறந்தநாளை அரசு விழாவாகவும் தமிழக அரசு கொண்டாடி வருகிறது.

இந்நிலையில், முல்லை பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் சிலை, அவரது சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டில் நிறுவப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்த பணத்தை செலவு செய்து அமைத்த கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களுடைய புதிய சிலையை, அவரது சொந்த ஊரான லண்டன் கேம்பர்ளி நகர மைய பூங்காவில் தமிழ்நாடு அரசு சார்பில் நிறுவப்படுவது குறித்து அவரது பிறந்த நாளான இன்று (ஜன.15) அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

எனவே கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களுடைய புதிய சிலையை அவரது சொந்த ஊரான லண்டன் கேம்பர்ளி நகர மைய பூங்காவில் நிறுவ அனைத்து லண்டன் வாழ் தமிழர்களால் முயற்சிகள் எடுக்கப்பட்டு, சிலை நிறுவன இங்கிலாந்து சட்டப்படி செயின் பீட்டர் தேவாலயத்தில் ஒப்புதல் பெற்றுள்ளது.

ஆங்கில பொறியாளரான ஜான் பென்னிகுயிக் இங்கிலாந்து அரசு நிதிஉதவி செய்யாத நிலையிலும், இங்கிலாந்தில் உள்ள தனது சொத்துகளை விற்று எல்லாவிதமான தடைகளையும் தாண்டி முல்லைப்பெரியாறு அணையை 1895-ல் காட்டியுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை , சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. மேலும் இந்த அணையின் மூலம் அந்த 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமே முழுமையாக செழுமையடைந்து, மாற்றங்கள் பெற்றுள்ளது" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE