24 காளைகளை அடக்கிய அவனியாபுரம் கார்த்திக் முதலிடம்!

By காமதேனு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 24 காளைகளை அடக்கிய மண்ணின் மைந்தன் கார்த்திக் முதலிடம் பிடித்துள்ளார். 19 காளைகளை அடக்கிய முருகன் 2வது இடத்தையும், 11 காளைகளை அடக்கிய பரத் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ஜல்லிகட்டு போட்டியை அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் மற்றும் அனைவரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

ஆன் லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 300 மாடுபிடி வீரர்களும், 624 காளைகளும் பங்கேற்றனர். 2 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவசரகால மருத்துவ தேவைக்காக 10 மருத்துவக் குழுக்களும், 108 அவசர ஆம்புலன்ஸ் ஊர்திகளும், காளைகளுக்கான தனி ஆம்புலன்ஸ்களும், தீயணைப்புதுறை வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

கோப்பையுடன் மாடுபிடி வீரர் கார்த்திக்

மாடு வெளியேறும் பகுதியில் நின்றுகொண்டு ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பாலமுருகன் என்ற 19 வயது இளைஞரை, அந்த வழியாக வந்த ஒரு மாடு முட்டித்தள்ளியது. இதில் பலத்த காயமடைந்த பாலமுருகனை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒவ்வொரு சுற்றிலும் தலா 30 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடைபெற்றது. மொத்தம் 7-ம் சுற்றுகள் நடைபெற்றன. மாலை 5.30 மணிக்கு போட்டி நிறைவடைந்தது. 25 மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் 8 பேர், காளைகளின் உரிமையாளர்கள் 15 பேர் என மொத்தம் 48 பேர் காயமடைந்தனர். அவனியாபுரம் பகுதியை சேர்ந்த கார்த்தி 24 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார். அவருக்கு கார் பரிசு அளிக்கப்பட்டது. வலையங்குளம் பகுதியை சேர்ந்த முருகன் 19 காளைகளை அடக்கி 2வது பரிசை பெற்றார். அவருக்கு பைக் வழங்கப்பட்டது. 11 காளைகளை அடக்கிய பரத் 3வது இடத்தை பிடித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE