பொங்கல் திருநாளையொட்டி மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திலும், கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் திருவுருப்படத்துக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மனைவியுடன் சென்று மரியாதை செலுத்தினார்.
பொங்கல் பண்டிகையையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியில், "தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் - தமிழ் இனநாள் - பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள். கழக ஆட்சி மலர்ந்து கொண்டாடும் முதல் பொங்கல் திருநாளில் மேலும் மேலும் தமிழ்நாட்டை மேன்மையுறச் செய்யும் ஊக்கத்தைப் பெறுகிறேன். உங்கள் அன்பால் ஊக்கத்தை உழைப்பாய் மாற்றிடுவேன். இயற்கையோடு இயைந்து தமிழர்கள் நாம் கொண்டாடும் பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பைகளை இனிப் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு, #மீண்டும்மஞ்சப்பை பயன்படுத்துவோம்" என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து, கோபாலபுரம் இல்லத்திற்கு தனது மனைவியுடன் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்த கருணாநிதி திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.