பொங்கல் பண்டிகை கொண்டாடாத விநோத கிராமம்

By கி.பார்த்திபன்

தமிழகத்தில் பொங்கல் கொண்டாடாத கிராமம் இருக்குமா? இருக்கிறதே.. அதைப் பற்றிய விவரத்தைப் பார்ப்போம்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, மாநிலம் முழுதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக, விவசாயத்தைப் பிரதானத் தொழிலாகக் கொண்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகை களைகட்டுவது வழக்கம். ஆனால், கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாநிலம் முழுதும் பரவலாகப் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் எதுவுமின்றி களையிழந்துள்ளது.

இந்த ஆண்டும் அதேநிலை தொடர்கிறது. ஆனால், நாமக்கல் அருகே சிங்கிலிப்பட்டி கிராம மக்கள் கரோனா தொற்று மட்டுமல்ல, கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாகவே பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதைத் தவிர்க்கும் விநோதப் பழக்கத்தைக் கடைபிடித்து வருகின்றனர். அருகே உள்ள கிராம மக்கள் பொங்கல் பண்டிகைக்குத் தயாரானாலும், சிங்கிலிப்பட்டி கிராமம் மட்டும் எந்த பரபரப்புமின்றி காணப்படும்.

இதுகுறித்து சிங்கிலிப்பட்டி கிராம மக்கள் கூறும்போது, “கடந்த 100 ஆண்டுகளுக்கு முன், கிராம மக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர். அப்போது சுவாமிக்கு வைக்கப்பட்ட பொங்கலை நாய் தின்றுள்ளது. இதை அபசகுணமாக கருதிய கிராம மக்கள், அந்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டத்தைத் தவிர்த்துள்ளனர்.

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை சமயத்தில் வழிபாடு நடத்தப்பட்டபோது, கிராமத்தில் உள்ள கால்நடைகள் இறந்தன. தொடர்ந்து நடந்த இதுபோன்ற அசம்பாவிதங்களால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், பண்டிகைக் கொண்டாட்டத்தைத் தவிர்க்கத் தொடங்கினர். இச்சூழலில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன், சிங்கிலிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் இளங்கோ பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்.

அப்போது, அவரது வீட்டில் இருந்த கறவை மாடு திடீரென இறந்தது. இதனால், பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டத்தை முற்றிலுமாகத் தவிர்த்து வருகிறோம். பண்டிகை தொடர்பான எந்த விழாவும் கிராமத்தில் நடத்துவதில்லை. கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் வெளியூர்களில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளனர். அவர்களும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை. அதேவேளையில் கிராமக் கோயில் திருவிழா உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன” என்றனர்.

எஸ்.தமிழ்ச்செல்வன்

இதுகுறித்து சிங்கிலிப்பட்டி கிராம ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வன் கூறும்போது, “சிங்கிலிப்பட்டி கிராமத்தில் நூறாண்டுகளுக்கும் மேலாக பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை. சாமிக்கு வைத்த படையலை நாய் சாப்பிட்டுள்ளது. அதனால் ஆடு, மாடுகள் இறந்ததால் பொங்கல் கொண்டாடுவதில்லை. ஆனால், சமீப காலமாக முன்னாள் தலைவர், தற்போதைய தலைவர் மற்றும் கிராமத்து இளைஞர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக ஒரு சிலர் பொங்கல் வழிபாடு நடத்தத் தொடங்கியுள்ளனர்” என்றார்.

காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதைதான் இந்தக் கிராம மக்களின் அச்சத்துக்குக் காரணம். வேறென்னத்தச் சொல்ல!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE