கரோனா 3-வது அலை அதிகரித்துவரும் நிலையில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதை தவிர்க்கும்படியும், ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்துபடியும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்து, ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த உத்தரவிடக்கோரி நெல்லையைச் சேர்ந்த அப்துல் வகாபுதீன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:- “கரோனாவின் முதல் மற்றும் 2-ம் அலைகளின்போது பள்ளிகள் முழுதும் மூடப்பட்டு, ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது 3-வது அலை மிகத் தீவிரமாக பரவிவரும் சூழலில், 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெறுகின்றன. 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன. இதனால் மாணவர்கள் எளிதாக கரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு அனைத்துப் பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் நடத்த தடை விதித்து, ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் ஆர். சண்முகசுந்தரம் ஆஜராகி, “மழலையர் வகுப்புகள் மற்றும் 1 முதல் 9 வரை நேரடி வகுப்புகளுக்கு அனுமதி கிடையாது. 10 முதல் 12 வரையிலான வகுப்புகளின் மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளவே பள்ளிக்கு அழைக்கப்படுகின்றனர்.
நேரடி வகுப்புகள் நடத்துவதும், கலந்துகொள்வதும் கட்டாயமில்லை எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து அந்தந்த பள்ளிகள் முடிவு எடுக்கலாம் என்றும் தமிழக அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது. மேலும் நேரடி வகுப்புகள் நடத்தினால் கலந்துகொள்வது மாணவர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது” என்று கூறினார்.
அதற்கு நீதிபதிகள், “3-வது அலை அதிகரித்துவரும் நிலையில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த வேண்டும். இதன்மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் என அனைவரின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும்” என்று தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கினர்.
பின்னர் மனுதாரர் தரப்பிடம், “அரசின் கொள்கை முடிவை மீறி பள்ளிகளை மூடும்படி நாங்கள் உத்தரவிட முடியாது. எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள், எத்தனை பேர் மரணம் அடைந்துள்ளார்கள் என்ற விவரங்கள் ஏன் மனுவில் இடம் பெறவில்லை” என கேள்வி எழுப்பினர். பின்னர், மனுதாரர் தரப்புக்கு அபராதம் விதிக்கப்போவதாக நீதிபதிகள் எச்சரிக்கை செய்தனர்.
இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் அப்துல் வகாபுதீன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.