ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் ஆவணங்களை இன்று தாக்கல் செய்துள்ளது
ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தற்போது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மற்றும் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்த ரிட் மனு ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் நேற்று(ஜன.10) விசாரித்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “அரசு வேலை வாங்கித் தருவதாகப் பணம் வசூலிக்கப்பட்ட விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக 32 பேர் புகார் அளித்துள்ளனர். அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட செய்தியை அறிந்து தலைமறைவானார். எனவே, அவரை கைது செய்வதுதான் சரியாக இருக்கும் என காவல் துறை நினைத்தது. அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு அரசியல் காரணங்களுக்கானது என்று கூறுவது அடிப்படையற்றது” எனக் கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், ராஜேந்திர பாலாஜிக்கு ஒரு மாதம் ஜாமீன் அளிக்கவும், ஒரு மாதத்துக்குள் விசாரணையை நடத்தி முடிக்கவும் யோசனை தெரிவித்ததோடு, ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் தரப்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ராஜேந்திர பாலாஜி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு மற்றும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் மோசடி புகார்கள், காவல் துறை தரப்பில் நடத்தப்பட்ட விசாரணை, முன்ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டவுடன் அவர் தலைமறைவாக இருந்தது மற்றும் அவரைப் பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்ட விவகாரம் ஆகியவற்றை தமிழக அரசு பதிவு செய்திருக்கிறது.
அதேபோல ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டது உட்பட ராஜேந்திர பாலாஜி வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்துள்ள தமிழக அரசு, இந்த மோசடி விவகாரம் தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க அனைத்து முகாந்திரமும் இருப்பதால், ராஜேந்திர பாலாஜிக்கு எந்தச் சலுகையும் வழங்கக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நாளை நடக்க இருக்கிறது.