இந்த அரசு மக்களுக்கான இயந்திரமாக எந்நாளும் செயல்படட்டும்!

By காமதேனு

சென்னை தலைமை செயலகத்தில் புதிய திட்டங்கள் தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “கடந்த செப்.16-ம் நாள் அனைத்துத் துறைச் செயலாளர்களுடனும் எனது முதல் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினேன். அதுவரை செய்யப்பட்ட அறிவிப்புகளுக்கு விரைவில் அரசாணை வெளியிடக் கேட்டுக் கொண்டேன். தலைமைச் செயலாளரும் மாதம்தோறும் அனைத்து அரசுச் செயலாளர்களோடும் ஆய்வுகளை நடத்தி, பணிகளை விரைவுபடுத்தியிருக்கிறார்.

இந்தக் கண்காணிப்பால் இதுவரை மொத்தம் வெளியிடப்பட்ட 1,641 அறிவிப்புகளில் 1,313 அறிவிப்புகள், அதாவது 80 விழுக்காடு அறிவிப்புகளுக்கு உரிய ஆணைகள் 10.01.2022 வரை சம்பந்தப்பட்ட துறைகளால் வெளியிடப்பட்டுள்ளன. மீதமுள்ள அறிவிப்புகளுக்கு உரிய ஆணைகளையும் உடனடியாக வெளியிட்டு, 100 விழுக்காடு இலக்கை அடைய வேண்டும் என்பதுதான் நமது குறிக்கோள்.

ஆணைகள் வெளியிடப்பட்டவுடன் நம்முடைய பணி நிறைவு பெறவில்லை. நீங்கள் வெளியிட்ட ஆணைகள் அனைத்தும் செயல்பாட்டில் வந்துள்ளனவா என தொடர்ந்து நீங்கள் நேரடியாக கண்காணிக்க வேண்டும். அரசுச் செயலாளர்கள் குறைந்தபட்சம் மாதம் 2 முறை மாவட்டங்களுக்குச் சென்று பல்வேறு நலத் திட்டங்களின் செயல்பாட்டை அறிந்து, உரிய தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரும் ஆண்டுக்கான திட்டங்களை இப்போதே திட்டமிடுவதற்கான முன்னெடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள 20 அறிவிப்புகளில் ஒன்றிய அரசின் சம்பந்தப்பட்ட துறைகளோடு தொடர்ந்து தொடர்புகொண்டு, உரிய முறையில் வலியுறுத்தி தேவைப்பட்ட நிதி ஒதுக்கீடுகளையும், ஒப்புதல்களையும் பெற ஆவன செய்ய வேண்டும்.

உங்களுக்கு நீங்களே ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி, இந்த ஆண்டுக்கான திட்டங்கள், அடுத்த 4 ஆண்டுக்கான திட்டங்கள், 2030 வரையிலான திட்டங்கள் என திட்டமிட வேண்டும்.

நமது சிந்தனைகளும், கனவுகளும், குறிக்கோள்களும் பெரிதாக இருந்தால்தான் நமது சாதனைகளும் பெரிதாக இருக்கும். நம்மை விட அதிகமாக வளர்ந்தவர்களோடு நம்மை ஒப்பிட வேண்டும். நம்முடைய இலக்குகள் அனைத்தும் திட்டம் அடிப்படையில் மட்டுமே இல்லாமல், நாம் அடைய வேண்டிய நோக்கத்தை சென்றடையும் வகையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

நீர் வளங்களை மேம்படுத்தவும், வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், கல்வித் தரத்தை உயர்த்தவும், சுகாதாரக் குறியீடுகளை மேம்படுத்தவும், அனைவருக்கும் வீடு என்கிற இலக்கை அடையவும், தொழில் துறையில் உயரிய வளர்ச்சியை அடையவும், நம்முடைய இளைய சமுதாயத்தினரின் திறனை மேம்படுத்துவதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும், சுற்றுச்சூழலை சமநிலைப்படுத்தவும், தொடர்புடைய துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரு கூட்டு முயற்சியுடன் செயல்படுவதுடன், இந்த நோக்கங்களின் இலக்கை அடைய அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

அனைத்துத் துறைகளின் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்த தகவல்களை நான் தெரிந்துகொள்வது தொடர்பாக, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் முதலமைச்சரின் தகவல் பலகை (DASH BOARD) ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் தகவல்களைக் கொண்டு, நான் நாள்தோறும் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.

இந்தப் பலகையில் அரசு வெளியிட்டு வரக்கூடிய அனைத்து அறிவிப்புகள், அரசின் முக்கிய திட்டங்கள் தொடர்பான அனைத்துத் தரவுகளும் இடம்பெற்றுள்ளன. அதில் உங்களது தகவல்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்யுங்கள். அறிவிப்புகளின் செயலாக்கம் குறித்து அடுத்த மாதம் ஆய்வுசெய்ய இருக்கிறேன். அதற்குள் விடுபட்ட திட்டங்களுக்குச் செயல்வடிவம் கொடுங்கள். புதிய திட்டங்களைக் கொண்டு வாருங்கள்.

அறிவித்தவை செயல்களாக ஆகட்டும். நமது எண்ணங்கள் புதிய அறிவிப்புகளாக மலரட்டும். மக்களுக்கான அரசு இயந்திரமாக எந்நாளும் செயல்படட்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE