நிர்வாகத்தில் ஆளும்கட்சியினர் தலையீடு; ஆட்சியரிடம் புகார்

By கரு.முத்து

சுதந்திரமாகச் செயல்படவிடாமல் தங்கள் நிர்வாகத்தில் ஆளுங்கட்சியினர் தலையிட்டு இடையூறு செய்வதாக, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 9 ஊராட்சி ஒன்றியங்களின் குழுத் தலைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் மனு அளித்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அதிமுக வசம் இருக்கின்றன. அவற்றை தங்கள் வசம் கொண்டு வரவேண்டும் என்று திமுக மாவட்டக் கழகச் செயலாளர்களும், அமைச்சர்களுமான எம்ஆர்கே பன்னீர்செல்வமும், வெ.கணேசனும் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.

அப்படித்தான் சில நாட்களுக்கு முன், நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 7 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கள் பக்கம் வந்துவிட்டதாக திமுகவினர் பத்திரிகைகளில் செய்தி பரப்ப, இல்லை இல்லை அவர்கள் எங்களுடன்தான் இருக்கிறார்கள் என்று அதிமுக மாவட்டச் செயலாளர் அருள்மொழித்தேவன் அவர்களை உடன் வைத்துக்கொண்டு பேட்டி கொடுத்தார்.

இப்படி அதிகாரத்தைக் கைப்பற்ற, ஆள்பிடிக்கும் வேலையை அமோகமாக செய்து கொண்டிருக்கும் திமுகவினரின் இந்த செயலைக் கண்டித்து கடலூர் மேற்கு, கிழக்கு மாவட்டச் செயலாளர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களுமான அருள்மொழித்தேவன், பாண்டியன் ஆகியோர் அதிமுகவைச் சேர்ந்த 9 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களையும் அழைத்துக் கொண்டு போய், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியனிடம் மனு அளித்தனர்.

மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் க.திருமாறன், அண்ணாகிராமம் ஒன்றியக் குழுத் தலைவர் வி.ஜானகிராமன், குறிஞ்சிப்பாடி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி ஜி.கலையரசி கோவிந்தராஜ், குமராட்சி ஒன்றிய குழுத் தலைவர் திருமதி பா.பூங்குழலி பாண்டியன், துணைத்தலைவர் திருமதி செ.ஹேமலதா செந்தில்குமார், நல்லூர் ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி செல்வி ஆடியபாதம், துணைத் தலைவர் திருமதி ஜான்சி மேரி, புவனகிரி ஒன்றியக் குழுத் தலைவர் சி.என்.சிவப்பிரகாசம், துணைத்தலைவர் வ.வாசுதேவன், கீரப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி கனிமொழி தேவதாஸ் படையாண்டவர், துணைத் தலைவர் திருமதி காஷ்மீர் செல்விவிநாயகம், கம்மாபுரம் ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி மோகனா விஜயகுமார், துணைத்தலைவர் மருதை முனுசாமி பரங்கிப்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவர் ச.கருணாநிதி, துணைத்தலைவர் மோகனசுந்தரம், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி லதா ஜெகஜீவன்ராம், துணைத் தலைவர் திருசெல்வம் ஆகியோர் கூட்டாக மனு அளித்தனர்.

“அவர்கள் அழைத்தால் செல்ல அதிமுக நிர்வாகிகள் யாரும் தயாராக இல்லை. அதனால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது, மிரட்டுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஆளும்கட்சியினர் தலையிட்டு நிர்வாகத்தில் இடையூறு செய்கிறார்கள். இதைக் கண்டித்து ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்" என்கிறார் மாவட்டச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான அருண்மொழித்தேவன்.
மாவட்டத்தில் உள்ள இத்தனை ஒன்றியக் குழுத் தலைவர்கள் திமுகவினருக்கு எதிராக மனு அளித்து இருப்பது, கடலூர் மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE