நடக்குமா நடக்காதா என்று ஏகத்துக்கும் எதிர்பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு நடக்கும் என்று தெரியவந்ததும் பல்வேறு கட்டுப்பாடுகளோடு இணைய தளத்தில் பதிவு செய்தோருக்கு மட்டுமே வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென அதிகரித்து வரும் கரோனா பரவலால், பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடக்குமா நடக்காதா என அனைவருக்கும் பெரிய சந்தேகம் எழுந்தது. “நிச்சயம் ஜல்லிக்கட்டு நடக்கும்” என அமைச்சர் பி.மூர்த்தி உறுதிபட தெரிவித்தார்.
அதன்படி, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டது. 300 மாடுபிடி வீரர்கள், 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். 2 நாட்களுக்கு முன் எடுத்த கரோனா நெகட்டிவ் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஜனவரி 14-ல் அவனியாபுரம், 15-ல் பாலமேடு, 16-ல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள உள்ள மாடுபிடி வீரர்கள் இணையதளம் மூலம் பெயர், புகைப்படம், வயது சான்றிதழ், கரானா தடுப்பூசி சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுபோன்று காளைகளுக்கான பதிவுகளையும் madurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாடுகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் ஏதாவது ஒரு போட்டியில் மட்டுமே அனுமதிக்கப்படும்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கான முன்பதிவு இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.