குவைத் தீ விபத்து சோகங்கள் முதல் மத்திய அரசு Vs காங். @ நீட் வரை | செய்தித் தெறிப்புகள்

By KU BUREAU

குவைத் தீ விபத்து - சில முக்கியத் தகவல்கள்: குவைத்தில் அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில் 42 பேர் இந்தியர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 19 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் வழங்கப்படும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது.

காரணம் என்ன? - ஆறு மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் தங்கியுள்ளனர். எகிப்து நாட்டு காவலாளி தங்கியிருந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததே தீ விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டிடத்தின் கீழ்தளத்தில் அந்த காவலாளி தங்கியிருந்துள்ளார். இதனால் அடுக்குமாடி குடியிருப்பின் மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 195 பேர் தங்கி இருந்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். அவர்களில் 150-க்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள். தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தவர்களில் 92 பேர் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 பேர் இரவு ஷிப்ட் என்பதால் பணிக்கு சென்றுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் என்பிடிசி நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் தங்கி இருந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

குவைத் தீ விபத்தில் தமிழர்கள் உயிரிழப்பு: கோவில்பட்டி அருகே வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மகனான 41 வயது மாரியப்பன் - கடந்த 20 ஆண்டுகளாக குவைத் நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் குவைத்தின் மங்கஃப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் அவரது நிறுவனம் ஒதுக்கித் தந்த அறையில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வந்தார்.

தீ விபத்தில் சிக்கி கோவில்பட்டி அருகே வானரமுட்டியைச் சேர்ந்த மாரியப்பன் காயமடைந்தார். அவருக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். உயிரிழந்த மாரியப்பனுக்கு கற்பகவள்ளி என்ற மனைவியும், விமலா என்ற மகளும், கதிர் நிலவன் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள முட்டம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகனான 42 வயது சின்னதுரை (42) என்பவர் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தார்.கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குவைத்தில் பணியாற்றி வந்த நிலையில், குடும்பத்தினருடன் இருப்பதற்காக வேலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கே முன்பு தான் சொந்த ஊருக்கு திரும்பி குடும்பத்தினருடன் இருந்து வந்துள்ளார். மீண்டும் குவைத் கம்பெனியிலிருந்து அழைப்பு வந்ததால், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மீண்டும் குவைத் சென்று வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் அவர் 2 வாரங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வருவதாக இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் தீ விபத்தில் உயிரிழந்தது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த முகமது ஷெரீப் கடந்த 14 ஆண்டுகளாக குவைத்தில் உள்ள மெட்டீரியல் ஸ்டீல் சில்வர் கம்பெனியில் ஃபோர்மேனாக பணியாற்றி வந்துள்ளார். அவரும் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் ஷெரீப், குவைத் மருத்துவமனையில் சிகிச்சைபெறும் புகைப்படம் நேற்று முதல் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், அவரது குடும்பத்தினர் அது முகமது ஷெரீப்பின் புகைப்படம் அல்ல என மறுப்புத் தெரிவித்தனர். இதற்கிடையே, ஷெரீப் தங்கி இருந்த இடத்திலேயே உடல் கருகி இறந்துபோனார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதையடுத்து ஷெரீப்பின் உடலை உடனடியாக செஞ்சிக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனிடையே, குவைத் நாட்டில் தீ விபத்து நிகழ்ந்த கட்டிடத்தில் தங்கி இருந்த பேராவூரணியைச் சேர்ந்த 28 வயதான புனாஃப் ரிச்சர்ட் ராய் என்ற இளைஞர் குறித்து இதுவரை எந்தத் தகவலும் தெரியாததால் பெற்றோரும் உறவினர்களும் கவலை அடைந்துள்ளனர்.

குவைத் தீ விபத்து: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை: குவைத் நாட்டின் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்திருப்பதை அங்கிருக்கும் தமிழ் சங்கம் மூலம் உறுதிபடுத்தியுள்ளதாக அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வியாழக்கிழமை காலை கூறினார். மேலும், தீ விபத்து தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆலோசனை மேற்கொண்டார்.

அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு: கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்புப் பிரிவினராக கருத வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஜூன் 22-ல் கூடுகிறது: ஜிஎஸ்டி கவுன்சிலின் கடைசி கூட்டம் நடந்து முடிந்து எட்டரை மாதங்கள் ஆகியுள்ள நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 53வது கூட்டம் ஜூன் 22ம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் என்று நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு: பிரதமர் மோடி ஆய்வு: ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி பேசினார். அப்போது, ஜம்மு காஷ்மீரில் தற்போது நிலவும் சூழல் குறித்த முழு விவரங்கள் அவருக்கு அளிக்கப்பட்டது.இதையடுத்து, பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்காக நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு திறன்களின் முழு அளவையும் பயன்படுத்த வேண்டும் என்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசிய பிரதமர், பாதுகாப்புப் படைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார். ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹாவிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உள்ளூர் நிர்வாகம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து கேட்டறிந்தார்.

என்சிஇடி தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்புக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உறுதுணை நடிகர் பிரதீப் கே.விஜயன் மரணம்: ‘தெகிடி’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்த உறுதுணை நடிகர் பிரதீப் கே.விஜயன் சென்னையில் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்டமாக தகவல் வெளியாகியுள்ளது.

1,563 பேருக்கு நீட் மறுதேர்வு: உச்ச நீதிமன்றத்தில் தகவல்: நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 தேர்வர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி இந்த மறுதேர்வு வரும் ஜூன் 23-ம் தேதி நடத்தப்படுகிறது. இதன் முடிவுகள் ஜூன் 30-ம் தேதி அன்று வெளியாகிறது. இதனை தேசிய தேர்வு முகமை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.கடந்த 4-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. மே 5-ம் தேதி நடைபெற்ற நடப்பு ஆண்டுக்கான இளங்கலை மருத்துவம் பயில்வதற்கான நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக சொல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, தேசிய தேர்வு முகமை இவ்வாறு கூறியுள்ளது.

நீட் தேர்வு முறைகேடு சர்ச்சை: மத்திய அரசு Vs பாஜக: மத்திய கல்வி அமைச்சராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட தர்மேந்திர பிரதான், "நீட் தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. வினாத்தாள் கசியவில்லை. வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்றார். மேலும், “நீட் தேர்வில் பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது போன்ற ஒரு சூழல் உருவாக்கப்படுகிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஏற்போம்" என்று அவர் தெரிவித்தார்.

அதேவேளையில், "நீட் தேர்வு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை விஷயத்தில் பாஜக அரசின் அணுகுமுறை பொறுப்பற்றதாகவும், உணர்வற்றதாகவும் உள்ளது. சுமார் 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள இந்த முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

பல்வேறு பயிற்சி மையங்கள் கொடுத்த வாக்குறுதிகளால், சாதாரண குடும்பங்கள் ரூ.30 லட்சம் வரை செலவழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு மண்டியிட்டு மாணவர்களுக்கு பொறுப்புகூற வைக்கும் அளவுக்கு இம்முறை இண்டியா கூட்டணி வலிமையாக உள்ளது. நீட் தேர்வு முடிவுகள் ஏன் ஜூன் 4-ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதற்கு பதில் வேண்டும். ஆனால், அரசு, விவாதத்தை தவிர்க்க விரும்புகிறது” என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE