புதுச்சேரியில் முழு ஊரடங்கு கிடையாது!

By காமதேனு

“புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு கிடையாது, பொங்கல் கொண்டாட்டங்களுக்கும் தடையில்லை” என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், கோவிட் மேலாண்மை குழுவின் அவசர கூட்டம் துணைநிலை ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் பேசியதாவது: “மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் கரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். முழு ஊரடங்கால் மக்கள் பீதி அடைவார்கள் என்பதால், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது.

திருமணங்கள், விழாக்கள், விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகளோடு அனுமதி வழங்கலாம். பொங்கல் கொண்டாட தடை இல்லை. என்றாலும், காணும் பொங்கல் அன்று மக்கள் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.

மருத்துவமனைகளில் போதிய வசதிகள் தயார்நிலையில் இருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்வதும் அதற்கான ஆவணங்களை வைத்துக்கொள்வதும் அவசியம் என்ற எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் மக்கள் அதிக அளவில் கூடுவதைத் தடுத்து, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு வார இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் வாரஇறுதி நாளில் ஊரடங்கு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE