தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில், வரும் ஜன.31 வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதத்துக்குப் பின்னர் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. இருப்பினும், கடந்த சில நாட்களாக மீண்டும் வைரஸ் பாதிப்பு உயரத் தொடங்கி தினசரி பாதிப்பு மீண்டும் 15 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. இந்நிலையில், நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதைத் தவிர்க்க மாநிலத்தில் வரும் ஜன.31 வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : தமிழகத்தில் கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தற்போதுள்ள ஊரடங்கு பின்வரும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜன.31 வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.
மேலும், ஜன.14 முதல் 18 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
ஜன.16 ஞாயிறன்று முழு ஊரடங்கு வெளியூர் செல்லும் பொதுப் பேருந்துகளில் 75 சதவீத பயணிகள் மட்டும் அமர்ந்து பயணிக்க அனுமதி.
கரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், உரிய சிகிச்சை அளித்திட தேவையான மருத்துவக் கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளன. இருப்பினும் பொதுமக்கள் அத்தியாவசியக் காரணங்களுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும். பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து 2 தவணை தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டால் கரோனா நோய்த் தொற்றிலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.