ராமேஸ்வரம் கோயிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

By காமதேனு

உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மிக முக்கியமான கோயில்களில் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலும் ஒன்றாகும். குஜராத் சோமநாதர் ஆலயத்தைப் போலவே, தமிழகத்தின் ராமேஸ்வரம் ஆலயமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலுக்கு ஏற்கெனவே தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாகவே கோயிலின் நான்கு வாசல் பகுதிகளிலும் 24 மணி நேரமும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

நான்கு ரத வீதிகள் வழியாக முக்கிய பிரமுகர்கள் வாகனத்தைத் தவிர வேறெந்த வாகனமும் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் கடந்த சில நாட்களாகவே கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாகக் கோயிலின் கிழக்கு வாசல் பகுதியில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் கூடுதலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராமேஸ்வரம் கோயிலுக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக, உளவுத்துறை எச்சரிக்கை அளித்ததைத் தொடர்ந்துதான் இந்தக் கூடுதல் பாதுகாப்பு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் அவ்வப்போது கோயிலின் அனைத்துப் பிரகாரங்களிலும் போலீஸார் தீவிரமாக சுற்றிவந்து கண்காணிக்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் கோயிலின் மேல் பகுதி மற்றும் ரத வீதிகளிலும் போலீஸார் கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் சுற்றுகின்றனரா என்பது குறித்து கண்காணித்து வருகின்றனர்.

ராமேஸ்வரம் கோயிலில் கூடுதலாகப் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு நிலைமை பரபரப்பாகவே உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE