பத்திரிகையாளர்களுக்கு விரிவாக்கப்பட்ட மருத்துவக் காப்பீடு அட்டை

By காமதேனு

தமிழகம் முழுதும், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, இன்று சுமார் 4 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். அதனூடே, அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு விரிவாக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகளையும் முதல்வர் வழங்கினார்.

தமிழகத்தில் கடந்த டிச.25 அன்று ஒருநாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 597ஆக பதிவாகியிருந்த நிலையில், நேற்று(ஜன.9) இந்த எண்ணிக்கை 12,895ஆக அதிகரித்துள்ளது. கடந்த சிலநாட்களில் தொற்று பாதிப்பு திடீரென அதிகரித்திருப்பது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில சுகாதாரத் துறை தீவிரப்படுத்தி வருகிறது.

நேற்று முன்தினம்(ஜன.8) 18-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று முடிந்தது. இதன் தொடர்ச்சியாக முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதைக் கடந்தோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை இன்று முதல்வர் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கடந்த 2021 ஏப்ரல் மாதத்தில் 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் தற்போது பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள்” என ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதன்படி, மாநிலம் முழுதும் மொத்தம் 36.26 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தகுதியானவர்களாக தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் முதல்கட்டமாக சுமார் 4 லட்சம் பேருக்கு, இன்று பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தை சென்னை எம்.ஆர்.சி நகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அத்துடன் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின்கீழ் சிகிச்சைப் பெறுவோருக்கு வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், பத்திரிகையாளர்களுக்கு இந்த வரம்பு பொருந்தாது என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு அடையாள அட்டையை முதல்வர் இன்று வழங்கினார்.

ஏற்கெனவே என்ன தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களோ, அதே தடுப்பூசிதான் பூஸ்டர் டோஸாகச் செலுத்தப்படும். அதுமட்டுமல்லாது, கோவின் இணையதளத்தில் 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு 9 மாதம் அல்லது 273 நாட்கள் முடிந்துள்ளதா என்பதை சரிபார்த்த பின்னரே, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேபோல், மதுரையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி இன்று தொடங்கிவைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “மதுரையில் கரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. மக்களுக்கு தற்போது கரோனா விழிப்புணர்வுதான் தேவைப்படுகிறது. மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிச்சயம் நடைபெறும். இதுகுறித்து முதல்வர் இன்று அறிவிக்க வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE