புதுச்சேரி: திருமணத்துக்காக சென்னையிலிருந்து வந்தவர் தவறவிட்ட 10 சவரன் நகைகளை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை புதுச்சேரி போலீஸார் பாராட்டினர்.
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் பிரசாத். இவர் தனது குடும்பத்தினருடன் புதுச்சேரிக்கு திருமண நிகழ்ச்சிக்காக வந்தார். அப்போது அவர் புதுச்சேரி நகர் காமராஜர் சாலையிலிருந்து ஆட்டோ மூலம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள திருமண மண்டபத்துக்கு சென்றுள்ளார்.
ஆட்டோவில் இருந்து இறங்கிய போது, அவர்கள் வைத்திருந்த நகைப்பை, பட்டுப்புடவை ஆகியவற்றை எடுக்காமல் சென்றுவிட்டனர். திருமண மண்டபத்தில் இறங்கிய பிறகு நகைப்பை தவற விட்டதை உணர்ந்த பிரசாத் லாசுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதற்கிடையே, ஆட்டோவில் நகைப்பை இருந்ததை அறிந்த லாஸ்பேட்டையைச் சேர்ந்த ஓட்டுநர் சடகோபன் அதுகுறித்து காவல் நிலையத்துக்கு தெரிவித்துள்ளார். உடனே ஆட்டோ ஓட்டுநரைக் காவல் நிலையம் வரவழைத்த போலீஸார், அவரையே பிரகாஷிடம் நகைப்பை மற்றும் பட்டுப்புடவையை ஒப்படைக்கக் கேட்டுக்கொண்டனர். அதன்படி ஆட்டோ ஓட்டுநர் நகைப்பை, பட்டுப்புடவையை பிரகாஷிடம் வழங்கினார். ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையை பாராட்டியதாக போலீஸார் இன்று தெரிவித்தனர்.